உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சளி, வறட்டு இருமலுடன் வேகமாக பரவுது... மர்ம காய்ச்சல் மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்

சளி, வறட்டு இருமலுடன் வேகமாக பரவுது... மர்ம காய்ச்சல் மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சளி, வறட்டு இருமலுடன் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை இறுதி கட்டத்திலும், ஆங்காங்கே அதிகம் பெய்து வருகிறது. இரவில் கன மழை, பகலில் வெயில் என, தட்ப வெப்ப நிலை மாறி நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடல் சோர்வு, மாலைநேர குளிர், வறட்டு இருமல், சளியுடன் காய்ச்சல் பரவி வருகிறது. மருத்துவ சிகிச்சையிலும் பெரிதாக குணமாவதில்லை. சிலருக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் உடல் வலி, தொண்டை வலி பாதிப்பு தொடர்பவதால், மர்ம காய்ச்சல் பரவுகிறதோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது. இதில், நடுத்தர வயதினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் தினமும் பல்வேறு வகை காய்ச்சலால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வகை பாதிப்புகள், டெங்கு, டைப்பாய்டு, மலேரியா உள்ளிட்ட பாதிப்புகளாக இருக்கலாம் என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கையில், மக்கள் நல்வாழ்வுத்துறையும், மாநகராட்சி தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால்தான், பாதிப்பின்தன்மை அதிகரித்து காணப்படுகிறது என, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில், நோய் எதிர்ப்பு குறைந்தவர்கள்தான், அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சரியான நேரத்தில் உரிய சிகிச்சை பெறவிட்டால், டெங்கு, நிமோனியா போன்ற இணை காய்ச்சல்கள் ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படவும் அபாயம் உள்ளது என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து, பொது சுகாதார நிபுணர் குழந்தைசாமி கூறியதாவது: தட்பவெப்ப நிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி போன்ற வைரஸ் காய்ச்சல் இருக்கிறது. தற்போது, 70 சதவீதத்துக்கு மேல், 'இன்ப்ளூயன்ஸா' காய்ச்சல் பாதிப்பு தான் உள்ளது. அதேநேரம், டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மழை விட்டு, விட்டு பெய்வதால், நன்னீரில் வளரக்கூடிய, 'ஏடிஸ்' கொசுக்கள் அதிகளவில் இனப்பெருக்கமாக வாய்ப்பு அதிகம். அதனால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, உயிரிழப்பும் அதிகரிக்கக் கூடும். எனவே, திறந்தவெளி இடங்கள், வீடு சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் துாய்மையாக பராமரிக்க வேண்டும். இவற்றை அரசு உறுதிப்படுத்த வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், கீரை வகைகள், பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி செய்வதன் வாயிலாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், முககவசம் அணிதல் போன்றவைகளின் வாயிலாக, பாதிப்புகளை தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார். *** - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ