நியூ ஆவடி சாலை விரிவாக்க பணி ஜவ்வு ஆக்கிரமிப்பில் சிக்கிய குடிநீர் வாரிய இடம்
அண்ணா நகர், நியூ ஆவடி சாலையில் விரிவாக்க பணிகள் பல மாதங்களாக நிலுவையில் இருப்பதால், அங்குள்ள குடிநீர் வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. அண்ணா நகர் மண்டலத்தில் வில்லிவாக்கம் - கீழ்ப்பாக்கம் வரை, நியூ ஆவடி சாலை உள்ளது. இதில், பாடியை நோக்கிச் செல்லும் பாதையின் சாலையோரம் ஐ.சி.எப்., ரயில்வேக்கு சொந்தமான இடங்கள் உள்ளன.வில்லிவாக்கம் - கீழ்ப்பாக்கம் நோக்கிச் செல்லும் சாலையோரம், குடிநீர் வாரியத்திற்குச் சொந்தமான இடங்கள் உள்ளன.இச்சாலையில் ஏராளமான வாகனம் பழுது பார்க்கும் கடைகள், செடிகள் விற்பனை கடைகள் உள்ளிட்டவை ஆக்கிரமித்து உள்ளன.இந்த கடைகளின் பழுது ஆட்டோக்கள் மற்றும் ஏராளமான கடைகள், நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டதால், சாலை சுருங்கியதுடன், காலையும் மாலையும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க துவங்கியது.இதுதொடர்பாக நம் நாளிதழில் தொடர்ந்து சுட்டிக் காட்டிய பின், கடந்தாண்டு கண்துடைப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையில், சென்னை மாநகராட்சியின் பேருந்து சாலை துறையின் நிதியில், சாலையை விரிவுபடுத்த திட்டமிட்டது. ஆக்கிரமிப்பு
இதற்காக கடந்தாண்டு மார்ச் மாதம், இரண்டு கட்டமாக, இருபுறங்களிலும் சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிரடியாக அகற்றியது.அதன் பின் முறையாக தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால், மீண்டும் சாலையில் ஆக்கிரமிப்பு தொடர்கிறது.அதிலும், ஐ.சி.எப்., - கீழ்ப்பாக்கம் நோக்கிச் செல்லும் பாதையில் சாலையோரத்தில் குடிநீர் வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் பூமிக்கடியில் தண்ணீர் குழாய் செல்கிறது.இதனால், இங்கு 3 கி.மீ., துாரத்திற்கு காலி மனையாக இருப்பதால், மாடுகளை வளர்ப்பது, வாகனங்களை 'பார்க்கிங்' செய்வது, கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.அதேபோல், அயனாவரம் சக்கரவர்த்தி நகரின் அருகில், குடிநீர் வாரியத்தின் இடத்திலும் குப்பை கொட்டுவதால், அங்கு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. வடிகால் இல்லை
நியூ ஆவடி சாலையில் பல ஆண்டுகளாகவே மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், சாலையை விட தாழ்வாக உள்ள இருபுறங்களிலும் ஆண்டுதோறும் மழைநீர் புகுந்து தத்தளிக்கின்றனர்.குறிப்பாக, நியூ ஆவடி சாலையில் உள்ள அண்ணா நகர் வட்டார போக்குவரத்து அலுவலகம், வேலாங்காடு சுடுகாடு, அன்னை சத்யா நகர் மற்றும் அயனாவரம் அதை ஒட்டி உள்ள குடியிருப்புகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. பணிகள் நிலுவை
நியூ ஆவடி சாலையை விரிவுபடுத்த திட்டமிட்டு பல மாதங்களாகியும், நிலமும் கையகப்படுத்தவில்லை. இதேபோல் பல பணிகள் நிலுவையிலேயே உள்ளன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், முறையாக பதில் அளிப்பதில்லை. சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் இதை கண்காணித்து, நியூ ஆவடி சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளை விரைவாக துவங்கி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.