கட்டட அனுமதி விண்ணப்பம் ஏப்.,1 முதல் புதிய நடைமுறை
சென்னை, சென்னை மாநகராட்சியில் கட்டட திட்ட அனுமதி பெற, திட்ட மதிப்பிற்கு ஏற்ப, பல லட்சம் ரூபாய் கமிஷன் பெறப்படுவதாகவும், அதற்கு உடன்படாதவர்களின் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்படுவதாவும், தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இவற்றை தடுக்கும் வகையில், மாநகராட்சிக்கு பதிலாக, தமிழக அரசின் ஒற்றை சாளர போர்ட்டல் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:சென்னை மாநகராட்சியில், ஆன்லைன் திட்ட அனுமதி பணிகள், கட்டட திட்ட ஒப்புதல் அமைப்பு வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த சேவையை மேம்படுத்த, தமிழக அரசின் ஒற்றைச் சாளர போர்ட்டலில் ஒருங்கிணைக்கப்படுகிறது.எனவே, ஏப்., 1 முதல், மாநகராட்சியில் சமர்ப்பிக்கப்படும் கட்டட திட்ட அனுமதிக்கான விண்ணப்பங்கள், onlineppa.tn.gov.inஎன்ற, தமிழக அரசின் ஒற்றை சாளர போர்ட்டல் இணையதளத்தில் தான் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மார்ச் 31, அதற்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும், ஏற்கனவே உள்ள நடைமுறைப்படியே ஒப்புதல் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.***