உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை துறைமுகத்தில் பயணியருக்கு... புதிய முனையம்! விமான நிலையத்தை போல நவீன வசதிகள்

சென்னை துறைமுகத்தில் பயணியருக்கு... புதிய முனையம்! விமான நிலையத்தை போல நவீன வசதிகள்

சென்னை, சென்னை துறைமுகத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளுடன் 100 கோடி ரூபாயில், புதியதாக பயணியர் முனையம் அமைக்கப்பட உள்ளது. விமான நிலையத்திற்கு, இணையாக அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நாட்டில் உள்ள பெரிய 12 துறைமுகங்களில் மூன்றாவது பெரிய துறைமுகமாக சென்னைத் துறைமுகம் திகழ்கிறது. சென்னை கடற்கரைப் பகுதியில் 1639ம் ஆண்டு கப்பல் வணிகப் போக்குவரத்து துவங்கியது.1881ம் ஆண்டு செயற்கைத் துறைமுகம் அமைக்கப்பட்டது. படிப்படியாக வளர்ந்து தற்போது, இந்த துறைமுகத்தில் 24 கப்பல்கள் நிறுத்தும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சமாக 6.10 கோடி டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. இங்கு கார்கள், கண்டெய்னர்கள், உரம், எண்ணெய் உள்ளிட்டவை அதிகளவில் கையாளப்படுகின்றன. சுற்றுலா பயணியர் கப்பல்களும் அதிகளவில் இயக்கப்பட உள்ளதால், இந்த துறைமுக வளாகத்தில் புதிய பயணியர் முனையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.இது குறித்து, சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது: சென்னை துறைமுக வளாகத்தில் தற்போதுள்ள பயணியர் முனையத்தில் இட நெருக்கடி உள்ளது. மேலும், துறைமுகத்தின் நுழைவாயில் இருந்து துாரமாக அமைந்திருக்கிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து அந்தமானுக்கு பயணியர் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, வெளிநாடுகளில் இருந்து பயணியர் சுற்றுலா கப்பல்களும் அடிக்கடி வந்து செல்கின்றன.வரும் ஆண்டுகளில் சுற்றுலா பயணியர் கப்பல் வருகை அதிகமாக இருக்கும். குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை நாடுகளை சேர்ந்த சொகுசு சுற்றுலா கப்பல்கள் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.எனவே, துறைமுக வளாகத்திலேயே, 100 கோடி ரூபாயில் புதியதாக பயணியர் முனையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான, இடம் தேர்வு பணி துவங்கி உள்ளது. விமான நிலையங்களில் இருப்பது போல அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். எஸ்கலேட்டர் வசதி, பாஸ்போர்ட் ஸ்கேன்னர், பயணியர் உடமைகளை சோதனையிடுவதற்கான அதிநவீன ஸ்கேன்னர், சுங்கம் மற்றும் குடியேற்றத் துறை சோதனை மையம்.மேலும், வரி இல்லாமல் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், முதலுதவி மையம், நவீன உணவகங்கள், காபி ஷாப், வெளிநாட்டு கரன்சிகள் மாற்றும் மையம், பயணியருக்கான சொகுசு ஓய்வறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை