செய்திகள் சில வரிகளில்
பள்ளியில் புகுந்த நாக பாம்பு சோழிங்கநல்லுார்: சோழிங்கநல்லுாரில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில், நேற்று ஒரு நாக பாம்பு புகுந்தது. தகவலின்படி வந்த மேடவாக்கம் தீயணைப்பு படையினர், பள்ளி வளாகத்தின் மறைவான பகுதியில் மறைந்திருந்த நாக பாம்பை மீட்டு, சதுப்பு நிலத்தில் விட்டனர். விடுதியில் இருந்து மாணவர் மாயம் வேளச்சேரி: காட்பாடியை சேர்ந்தவர் துர்கேஷ், 18. கல்லுாரி மாணவர். நேற்று முன்தினம், இவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெளியே சென்றவர், பின் விடுதிக்கு திரும்பவில்லை. இவரது மொபைல் போன், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி போலீசார், துர்கேஷ் குறித்து விசாரிக்கின்றனர். நவ., 1ல் பள்ளிகள் செயல்படும் ஆவடி: திருவள்ளூர் மாவட்டத்தில், நவ., 1ம் தேதி, சனிக்கிழமை, அரசு, அரசு உதவிபெறும், ஆதிதிராவிடர் நல பள்ளி, நகராட்சி துவக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து மெட்ரிக் பள்ளிகள், முழு வேலை நாளாக செயல்படும் என, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. போதை பொருள் பதுக்கியவர்கள் கைது வானகரம்: மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜீசஸ் கால்ஸ் அருகே, நேற்று காலை வானகரம் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி, சோதனை செய்தனர். அவர்களிடம் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் இருந்தது. விசாரணையில், திருப்பத்துார் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஐ.,யின் தனுஷ், 22; கல்லுாரி மாணவன், வேலுார் காட்பாடியை சேர்ந்த பரத்குமார், 23, என, தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மாமூல் கேட்ட ரவுடி கைது கொளத்துார்: கொளத்துார், தேவி நகரைச் சேர்ந்த ஜென்சிரத்தினம், 35, 200 அடி சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த 27ம் தேதி டீக்கடைக்கு வந்த கிஷோர் உள்ளிட்ட மூவர், ஜென்சிரத்தினத்திடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் பணம் தர மறுத்ததால், கடையில் வேலை செய்த தினேஷ் என்பவரை தாக்கி, மொபைல் போன், 2,750 ரூபாயை பறித்துச் சென்றனர். புகாரின்படி விசாரித்த ராஜமங்கலம் போலீசார், கொளத்துார், கண்ணகி நகரைச் சேர்ந்த கிஷோர், 23, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். கஞ்சா கடத்திய ஒடிஷா வாலிபர் கைது அண்ணா நகர்: ஒடிஷாவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக, அண்ணா நகர் மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, பெரம்பூர் ரயில் நிலையம் அடுத்த முரசொலி பூங்கா அருகில், போலீசார் கண்காணித்தனர். அப்போது, இரண்டு பெரிய பையுடன் ரயில் நிலையத்திலிருந்து வெளிவந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், ஒடிஷா மாநிலம், புவனேஸ்வரைச் சேர்ந்த லக் ஷ்மிகாந்த் நாத், 32, என்பதும், 10 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.