உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

1 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி சென்னை: சென்னையில் 1.03 லட்சம் தெரு நாய்களுக்கு 'ரேபிஸ்' தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 10 மண்டலங்களில் பணி முடிந்துள்ளது. அண்ணாநகர், கோடம்பாக்கம், சோழிங்கநல்லுார் மண்டலங்களில் பணி நடக்கிறது. அம்பத்துார், வளசரவாக்கம் மண்டலங்களில் விரைவில் துவங்கும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. துாய்மை பணியாளர் போராட்டம் ராயபுரம்: ராயபுரம் மண்டலத்தில், துாய்மை பணி தனியார் மயமாக்கலை எதிர்த்து, தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று காலை 100க்கும் மேற்பட்டோர், மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள ராயபுரம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலையை சுத்தம் செய்யும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். சவுக்கு சங்கர் மீது வழக்கு ஆதம்பாக்கம்: தயாரிப்பாளர் மகேஷ், ரீட் அண்ட் பாலோ என்ற படத்தை தயாரித்துள்ளார். இது போதை படம் என, 'யு டியூபர்' சவுக்கு சங்கர் விமர்சித்தார். தயாரிப்பாளர் மகேஷ் அளித்த புகாரில், ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்தனர். சம்மனை வாங்க சவுக்கு சங்கர் மறுத்ததால், நேற்று அவரது அலுவலகத்தில் போலீசார் ஒட்டி சென்றனர். விசாரணைக்கு நாளை ஆஜராக வேண்டும் என, குறிப்பிடப்பட்டு உள்ளது. சேத சாலையால் முதியவர் காயம் ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சாலையில் பாதி ஆவடி மாநகராட்சி கட்டுப்பாட்டிலும், மீதமுள்ள 2,000 அடி சாலை மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. குண்டும் குழியுமான இச்சாலையில், ஸ்கூட்டரில் பயணித்த பட்டாபிராம், காரியப்பா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பழனிவேல், 60, பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில், அவருக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 84.37 டன் மெத்தை கழிவு அகற்றம் சென்னை: சென்னையில் பொதுமக்கள் 137 பேரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகளை, வீடுகளுக்கே சென்று பெறும் சேவையில், நேற்று 84.37 டன் பொருட்களை மாநகராட்சி சேகரித்து அகற்றியுள்ளது. இச்சேவையை பெறுவதற்கு 1913 என்ற தொலைபேசி எண் அல்லது 94450 61913 என்ற 'வாட்ஸாப்' எண்ணிலும், முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். வடிகால்வாய் பணிக்கு அடிக்கல் ஆவடி: ஆவடி மாநகராட்சியில், மாநில பேரிடர் வெள்ளத்தடுப்பு நிதியின் கீழ், 38 கோடி ரூபாய் மதிப்பில், வடிகால்வாய் உள்ளிட்ட பணிகளுக்கு, அமைச்சர் நேரு நேற்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், ஆவடி மேயர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !