என்.ஜி.ஓ., காலனி நிலையத்திற்குள் வராத பஸ்களால் தொடரும் நெரிசல்
ஆதம்பாக்கம், ஆதம்பாக்கம், சிட்டி லிங்க் சாலையில், என்.ஜி.ஓ., காலனி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. அது, பணிமனையாகவும் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து தினசரி, 48 பேருந்துகள் சென்னை, புறநகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.இந்த பேருந்து நிலையத்தில், மூத்த குடிமக்களுக்கான இலவச டோக்கன் வழங்கப்படுகிறது. என்.ஜி.ஓ., காலனி பேருந்து நிலையத்தை கடந்து, பல மாநகர பேருந்துகள் செல்கின்றன. அதனால், 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் காலை, மாலை நேரங்களில், பயணியர் கூட்டம் அதிகம் காணப்படும்.அப்போது, அவ்வழியே செல்லும் பேருந்துகள், என்.ஜி.ஓ., காலனி நிலையத்திற்குள் செல்வதில்லை. பதிலாக, சிட்டி லிங்க் சாலையில் நின்று, பயணியரை ஏற்றிச் செல்கின்றன.அதனால், பயணியரும் நிலையத்திற்குள் செல்லாமல், சிட்டி லிங்க் சாலையிலேயே காத்திருக்கின்றனர்.நிலையத்தில், எம்.எல்.ஏ., நிதியில் நிழற்குடை, இருக்கை வசதிகள் இருந்தும், போக்குவரத்து கழகத்தின் மெத்தனத்தால், பயணியர் சாலையில் கால் கடுக்க நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது.மேலும், காலை, மாலை நேரங்களில், குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.இப்பிரச்னைக்கு தீர்வாக, பேருந்து நிலையத்தை முழுமையாக பயன்படுத்த, மாநகர போக்குவரத்து கழகமும், போக்குவரத்து போலீசாரும் முயற்சிக்க வேண்டும்.அவ்வாறு செய்தால், போக்குவரத்து பிரச்னை தீரும்; விபத்துகளும் தடுக்கப்படும் என்கின்றனர் பயணியர்.