கிளாம்பாக்கத்தில் சார்ஜிங் வசதி இல்லை: மின்சார பஸ்களை தடையின்றி இயக்குவதில் சிக்கல்
சென்னை:கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், 'சார்ஜிங்' வசதி இல்லாததால், மின்சார பேருந்துகளை தடையின்றி இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் தற்போது, வியாசர்பாடி பணிமனையில் இருந்து, 120 மின்சார பேருந்துகளும், பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து, 135 மின்சார பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 60க்கும் மேற்பட்ட பேருந்துகள், மாநகரின் பல்வேறு இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கிளாம்பாக்கம் வரை இயக்க வேண்டிய மின்சார பேருந்துகளில் சார்ஜ் அளவு குறைவதால், தாம்பரம் வரை இயக்கி, புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் செல்ல வேண்டியதாகிறது. கிளாம்பாக்கம் நிலையத்தில் மின்சார பேருந்துகளுக்கான 'சார்ஜிங்' வசதி இல்லாததால், பாதி வழியிலேயே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், பயணியர் சிரமப்படுவதோடு, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களும் அவதிப்பட வேண்டியதாகிறது. பயணியர் கூறுகையில், 'மின்சார பேருந்து ஓட்டுநர்கள் சிலர், திடீரென 'பிரேக்' போடுவதால், பேருந்தினுள்ளே பயணியர் தடுமாறி விழுகின்றனர். இது ஒரு முறை மட்டுமல்ல, அடிக்கடி நடப்பதால், பயணியருக்கு சிரமமாக உள்ளது. மின்சார பேருந்துகளை சீராக இயக்கும் வகையில், ஓட்டுநர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்' என்றனர்.