பேருந்தில் மொபைல் போன் திருடிய ஒடிசா சிறுவன் கைது
கொரட்டூர் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேகர், 60. அண்ணா நகரில் உள்ள மகனை காண, கடலூரில் இருந்து அரசு பேருந்தில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு, நேற்று முன்தினம் வந்துள்ளார்.அங்கிருந்து, மாதவரம் செல்லும், 104எம் பேருந்தில் ஏறி, அண்ணா நகர் வந்துள்ளார். அப்போது, தனது மொபைல் போன் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்த சேகர், அவரது மகனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.சேகரின் மொபைல் போன் இருப்பிடத்தை, 'இ - மெயில்' வாயிலாக கண்டுபிடித்த சேகரின் மகன், அதை பின் தொடர்ந்து சென்று, கொரட்டூர் சிக்னல் அருகே நின்றிருந்த வடமாநில வாலிபரிடம் மொபைல் போன் இருப்பதை உறுதி செய்தார்.பின், கொரட்டூர் போலீசார் உதவியுடன் வடமாநில வாலிபரை பிடித்து சோதனை செய்ததில், அவரது பையில் பல மொபைல் போன்கள் இருப்பது தெரிந்தது. ஒடிசாவைச் சேர்ந்த, 16 வயது சிறுவன், சில தினங்களுக்கு முன், நண்பர்கள் இருவருடன், ஒடிசாவில் இருந்து வந்து, சென்னை முழுதும் அரசு பேருந்துகளில் மொபைல் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள், 100க்கும் மேற்பட்ட மொபைல் போன்களை திருடி பல மாநிலங்களில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. சிறுவனிடம் இருந்து, பல லட்சம் மதிப்புடைய, 23 மொபைல் போன்களை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.