காரில் 105 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசா நபர் கைது
பல்லாவரம்; காரில் 105 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபரை, போலீசார் கைது செய்து கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, பல்லாவரம் ரேடியல் சாலையில், போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த, ஒடிசா மாநில பதிவெண் கொண்ட 'டாடா ஹெக்ஸா' காரை மடக்கி சோதனை செய்தனர். இதில், காரில் 105 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. காரை ஓட்டி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நிலாச்சல் பாலகா, 35, என்பவரை கைது செய்து விசாரித்தனர். இதில், ஒடிசாவில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வந்தது, பல்லாவரம், குரோம்பேட்டை பகுதியில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, காருடன் 105 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், நிலாச்சல் பாலகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.