கிண்டி: கிண்டியில், 80 அடி அகலம் கொண்ட இருவழி பாதையான 'சிட்டி லிங்க்' சாலை, 20 அடியாக சுருங்கியுள்ளது. எல்லையை காரணம் காட்டி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை அதிகாரிகள் தட்டிக்கழிப்பதால், வாகன ஓட்டிகள் மிகவும் பரிதவிக்கின்றனர். கிண்டி மடுவாங்கரையில் இருந்து, ஆதம்பாக்கம் கக்கன் பாலம் வரை உள்ள சிட்டி லிங்க் சாலை, 2.5 கி.மீ., நீளம், 80 அடி அகலம் கொண்டது. அடையாறு மண்டலத்தில், 172, 175 வார்டுகள் மற்றும் ஆலந்துார் மண்டலத்தில், 162, 163 ஆகிய வார்டுகளை ஒட்டி, இந்த சாலை உள்ளது. இந்த சாலை, இடத்தை பொறுத்து, 20, 30, 40 மற்றும் சில பகுதிகளில் 60 அடி அகலமாக உள்ளது. குறிப்பாக, ரயில்வே கேட் மற்றும் என்.ஜி.ஓ., காலனி பேருந்து நிலையம் அருகே, சிட்டி லிங்க் சாலை 20 அடிக்கும் குறைவாக உள்ளது. இதில், 350 மீட்டர் நீளத்திற்கு ஆக்கிரமிப்புகள் உள்ளதால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இது குறித்து, வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கூறியதாவது: குறுகலான சாலையில், கடைக்கு வரும் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்படுவதால், ஆமை வேகத்தில் செல்ல வேண்டி உள்ளது. நடைபாதையை ஆக்கிரமித்து சமையல் கூடம் அமைத்துள்ள உணவகங்களால், தினமும் 5 பேராவது விபத்தில் சிக்குகின்றனர். 'இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய, இரண்டு மண்டலங்களை சேர்ந்த அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்துள்ளோம். ஆனால், 'இது எங்கள் எல்லையில் இல்லை. 'அந்த மண்டல அதிகாரிகளிடம் புகார் தெரிவியுங்கள்' என, நான்கு வார்டுகளை சேர்ந்த வார்டு பொறியாளர்கள் மாறி, மாறி அலைய விடுகின்றனர். கிண்டியில் இருந்து, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், வாணுவம்பேட்டை மற்றும் வேளச்சேரியின் ஒரு பகுதிக்கு செல்ல, இந்த சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, இரண்டு மண்டல அதிகாரிகளும் சேர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து, மாநகராட்சி உயர் அதிகாரிகள் கூறியதாவது: சிட்டி லிங்க் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள், ஹோட்டல்களில் ஆய்வு செய்வது, சாலை விரிவாக்கம் போன்ற புகார்கள், மாநகராட்சிக்கு அதிக அளவில் வருகின்றன. இரண்டு மண்டல எல்லையில் வருவதால், சில நேரங்களில் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இரண்டு மண்டலங்களிலும் உள்ள நான்கு வார்டு பொறியாளர்களிடம் பேசி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.