உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.150 கோடி ஓ.எஸ்.ஆர்., நிலம் ஆக்கிரமிப்பு பட்டா ரத்து செய்வதில் அதிகாரிகள் பாராமுகம்

ரூ.150 கோடி ஓ.எஸ்.ஆர்., நிலம் ஆக்கிரமிப்பு பட்டா ரத்து செய்வதில் அதிகாரிகள் பாராமுகம்

பெருங்குடி:பெருங்குடியில், தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள, 150 கோடி ரூபாய் மதிப்புள்ள, பொது பயன்பாட்டிற்கான ஓ.எஸ்.ஆர்., நிலங்களை மீட்பதில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெருங்குடி மண்டலம், வார்டு 182ல் அமைந்துள்ள சந்தோஷ் நகர், பர்மா காலனி ஆகிய பகுதிகள், 40 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டவை. இப்பகுதிகளில், மனைப்பிரிவுகள் உருவாக்கும்போது ஒதுக்கப்பட்ட பொது பயன்பாட்டிற்கான ஓ.எஸ்.ஆர்., நிலத்தை, போலி பட்டா தயாரித்து, தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதில், சந்தோஷ் நகரில், பூங்கா, பூங்கா செல்லும் பாதை, பள்ளி இடம் என எட்டு கிரவுண்டும், ஓ.எம்.ஆர்., ஓரத்தில் பர்மா காலனியில், 12.5 கிரவுண்டும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இதன் தற்போதையை மதிப்பு, 150 கோடி ரூபாய். பெருங்குடி மண்டல மாநகராட்சி செயற்பொறியாளரிடம் கேட்ட போது, 'ஆக்கிரமிப்பு இடங்களின் போலி பட்டாவை ரத்து செய்யக்கோரிய வட்டார துணை கமிஷனரின் ஆணையை, நாங்கள் சோழிங்கநல்லுார் வருவாய்த்துறை வட்டாட்சியருக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள் ரத்து செய்தவுடன், குறிப்பிட்ட இடங்களை கைப்பற்ற மாநகராட்சி தயாராக உள்ளது' என்றார். இதுகுறித்து, சந்தோஷ் நகர் மக்கள் நலச்சங்கத் தலைவர் மீனாட்சிசுந்தரம் கூறியதாவது: ஆக்கிரமிப்பு நிலங்களின் பட்டாவை ரத்து செய்யக்கோரி, கோட்டாட்சியருக்கு அறிக்கை கொடுத்துள்ளோம் என, வட்டாட்சியர் கூறுகிறார். புகார் எண்: 818, கடந்த பிப்., 24ம் தேதியே சென்றுள்ளது. இதுகுறித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரித்தால், ஆக்கிரமிப்பு குறித்து விரிவான அறிக்கை கேட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்நிலங்களை மீட்டெடுப்பது குறித்து, பல ஆண்டுகளாக தொடர்ந்து புகார் அளித்து வருகிறோம். ஆனால், அதிகாரிகள் அலைக் கழித்து வருகின்றனர். பள்ளி ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டு வரும் கட்டடம், நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஆனாலும், இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, சோழிங்கநல்லுார் வட்டாட்சியரிடம் கேட்டபோது, 'பட்டாவை ரத்து செய்யும் அதிகாரம் கோட்டாட்சியருக்கே உள்ளது. ஏதேனும் விடுபட்ட தகவல்களை கேட்டு, புகார்கள் வந்திருக்கலாம். பணிச்சுமை காரணமாக, இன்னும் அவற்றை பார்க்கவில்லை' என்றார். ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும், முக்கியமான ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி அமைந்துள்ளன. எனவே, அவற்றை மீட்டால், அரசுக்கு நிரந்தர வருமானம் தரும் பல திட்டங்களை நிறைவேற்றலாம். ஆனால், குறிப்பிட்ட நிலங்களின் பட்டாவை ரத்து செய்வதில், அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர். எனவே, கலெக்டர் தலையிட்டு, போலி பட்டாவை ரத்து செய்து, அந்நிலங்களை கையகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை