ஆக்கிரமிப்பில் சிக்கிய அரசு இடத்தில் எச்சரிக்கை பலகை வைத்த அதிகாரிகள்
திருநீர்மலை திருநீர்மலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில், 'இது அரசு நிலம். ஆக்கிரமிப்பு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, வருவாய் துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.தாம்பரத்தை அடுத்த திருநீர்மலையில் பச்சைமலை உள்ளது. இம்மலையை சுற்றி சானடோரியம், மெப்ஸ், மீனாட்சி நகர், துர்கா நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, காசநோய் மருத்துவமனை ஆகியவை உள்ளன. இந்நிலையில், துர்கா நகர் பிரதான சாலையை ஒட்டியுள்ள, திருநீர்மலையின் அடிப்பகுதியில் காலியாக உள்ள, 1.50 ஏக்கர் அரசு நிலத்தை சுற்றி, சிலர் கம்பி வேலி அமைத்து, 'கேட்' போடுவதற்கு இரண்டு புறமும் பில்லர் அமைத்துள்ளனர். கண்ணெதிரே, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது குறித்து, பல முறை மனு கொடுத்தும், ஆக்கிரமிப்பை அகற்றாமல் வருவாய் துறை வேடிக்கை பார்த்து வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, அந்த இடத்தில் வருவாய் துறை சார்பில், அறிவிப்பு பலகை நடப்பட்டுள்ளது. அதில், 'திருநீர்மலை கிராமம், புல எண் 401, 402ல் உள்ள நிலம், அரசு புறம்போக்கு நிலம். இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதோ, விற்பதோ, வாங்குவதோ சட்டப்படி குற்றம். மீறி ஆக்கிரமிப்பு செய்வோர் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், சுற்றி போடப்பட்டுள்ள வேலியையோ, பில்லர்களையோ அகற்றவில்லை.