உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாதக்கணக்கில் வழிந்தோடும் சாக்கடை நீர் வேளச்சேரியை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

மாதக்கணக்கில் வழிந்தோடும் சாக்கடை நீர் வேளச்சேரியை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

அடையாறு மண்டலம், வேளச்சேரியில் அன்னை இந்திரா நகரில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.வேளச்சேரி - தரமணி சாலையில் இருந்து, பெருங்குடி ரயில் நிலையம், வீனஸ் காலனி மற்றும் பல தெருக்களுக்கு, சாஸ்திரி தெரு, பிரதான வழித்தடமாக விளங்குகிறது.தினம், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளி மாணவ - மாணவியர், வேலைக்கு செல்வோர் உள்ளிட்டோர், இச்சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.இச்சாலையில், பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக, காமராஜர் தெரு சந்திப்பில், இயந்திர நுழைவு வழியாக கழிவுநீர் வெளியேறி, 20 மீட்டர் துாரம் தேங்கி, அருகில் உள்ள மழைநீர் வடிகாலில் கலக்கிறது. ஒரு மாதமாக இப்பிரச்னை இருக்கிறது.சாக்கடை நீரில் நடந்து செல்வதால், மாணவர்களுக்கு காலில் அரிப்பு, புண் ஏற்படுகிறது. தவிர துர்நாற்றம் வீசுவதால், சுற்றுப்புற குடியிருப்புவாசிகள் தவித்து வருகின்றனர்.இது தொடர்பாக, குடிநீர் வாரியத்திற்கு பல முறை புகார் அளித்தும், அலுவலர்கள் முழுமையாக சீரமைக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அப்பகுதிவாசிகள் கூறியதாவது:திருவள்ளுவர் சாலை, தீயணைப்பு நிலையம் பகுதியில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்யாததாலும், சாஸ்திரி நகரில் இயந்திர நுழைவு மூடியை சரிசெய்யாததாலும், அதன் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது.காலை, மாலையில் அதிகளவில் கழிவுநீர் ஓடுவதால், வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது.குடிநீர் வாரிய அலுவலர்களிடம் கேட்டால், எல்.ஐ.சி., நகரில் உள்ள கழிவுநீரேற்று நிலையம் முறையாக செயல்படாததால் இப்பிரச்னை ஏற்படுவதாக கூறுகின்றனர்.இரு ஆண்டுகளுக்கு முன், இதே பிரச்னையை சந்தித்தோம். அப்போது, அனைத்து பாதாள சாக்கடை மூடிகளையும் அகற்றி, அடைப்பை சரி செய்த பின், பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.தற்போது மீண்டும், ஒரு மாதமாக இப்பிரச்னை நீடிக்கிறது. இந்த கழிவுநீரால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இப்பகுதி முதியோர், சிறார்களுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், இப்பிரச்னையும், சுகாதார சீர்கேடும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள், போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் இங்குள்ள பேபி நகர், டான்சி நகர், வீனஸ் காலனியைச் சேர்ந்த அனைத்து நலச்சங்கங்களும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.-- நமது நிருபர் - -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை