புல்லட் மீது மோதிய ஆம்னி பேருந்து கணவர் கண்ணெதிரே மனைவி பலி தீபாவளி ஷாப்பிங் சென்று திரும்புகையில் துயரம்
அரும்பாக்கம்: 'புல்லட்' மீது ஆம்னி பேருந்து மோதியதில், கணவர், மகன்கள் கண்முன்னே இளம்பெண் பரிதாபமாக பலியானார். அசோக் நகர், 85வது தெருவைச் சேர்ந்தவர் சிவசந்திரன், 37; ஐ.டி., ஊழியர். இவரது மனைவி திவ்யா, 33, மகன்கள் தர்ஷித், 8, தர்ஷன், 3. நான்கு பேரும் தீபாவளி கொண்டாட்டத்திற்காக பொருட்கள் வாங்க, நேற்று முன்தினம் இரவு, திருமங்கலம் சென்றுள்ளனர். 'ஷாப்பிங்' முடித்து, நான்கு பேரும் 'ராயல் என்பீல்டு' வாகனத்தில், 100 அடி சாலையில் கோயம்பேடு வழியாக வீட்டிற்கு சென்றனர். அரும்பாக்கம் அருகில் செல்லும் போது, அதே வழியாக தஞ்சாவூர், அதிராம்பட்டினம் செல்லும் 'சூர்யா டிராவல்ஸ்' என்ற தனியார் ஆம்னி பேருந்து, புல்லட்டில் உரசியுள்ளது. இதில், நிலைத்தடுமாறிய சிவசந்திரன் மற்றும் இரு குழந்தைகள் ஒரு புறமும், பேருந்து சக்கரத்தின் பகுதியில் திவ்யாவும் விழுந்தனர். இதில், பின்பக்க சக்கரத்தில் சிக்கிய திவ்யா, சம்பவ இடத்திலேயே கணவர் மற்றும் மகன்கள் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்தார். விபத்தில், சிவசந்திரனுக்கு எலும்பு முறிவும், பிள்ளைகளுக்கு சிராய்ப்பு காயமும் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். விபத்து ஏற்படுத்திய பாலவாக்கத்தை சேர்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் நாகராஜன், 38, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர். தீபாவளி பண்டிகை நேரத்தில், குடும்பத்தினர் கண்முன்னே பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.