உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அண்ணாமலை நகர் சுரங்கப்பாதை உயரத்தை குறைக்க ஆலோசனை கூட்டத்தில் எதிர்ப்பு

அண்ணாமலை நகர் சுரங்கப்பாதை உயரத்தை குறைக்க ஆலோசனை கூட்டத்தில் எதிர்ப்பு

திருவொற்றியூர், 'அண்ணாமலை நகர் சுரங்கபாதை உயரத்தை குறைக்கக் கூடாது' என, ஆலோசனை கூட்டத்தில், மண்டல குழு தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.திருவொற்றியூர் மேற்கு அண்ணாமலை நகர், அண்ணா நகர், காமராஜர் நகர், ராமசாமி நகர், பாலகிருஷ்ணா நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், வெற்றி விநாயகர் நகர் உள்ளிட்ட நகர்களில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

வலியுறுத்தல்

இப்பகுதி மக்கள், திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு பகுதிக்கு செல்ல, அண்ணாமலை நகர் - கிராமத்தெரு இடையே, நான்கு ரயில்வே தண்டவாளங்களை ஆபத்தான நிலையில் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், பாதசாரிகள், ரயில் மோதி உயிரிழப்பது தொடர்கதையாக இருந்து வந்தது. இதற்கு தீர்வாக, மேம்பாலம் அல்லது பேருந்து, ஆம்புலன்ஸ் செல்லகூடிய வகையில், பிரமாண்ட சுரங்கபாதை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.அதன்படி, 42 கோடி ரூபாயில், 13.5 அடி உயரம், 30 அடி அகலத்தில் இருவழித்தடம் மற்றும் இரு அணுகு சாலைகள் அமைக்கும் பணி, 2021ல் மண் பரிசோதனையுடன் துவங்கியது.சில மாதங்களுக்கு முன், திடீரென மண் சரிவு ஏற்பட்டு பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால், சுரங்கப்பாதை உயரம் குறைக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது. உயரத்தை குறைத்தால், பேருந்துகள், ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சூழல் ஏற்படும். எனவே, உயரம் குறைக்க கூடாது என, அப்பகுதி வாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, நமது நாளிதழில், மக்களின் பேட்டிகளுடன் விரிவான செய்தி வெளியானது.

வருத்தம்

இந்நிலையில், வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் தலைமையில், தாசில்தார் சகாயராணி, தி.மு.க.,வை சேர்ந்த மண்டல குழு தலைவர் தனியரசு, ஏழாவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக், நெடுஞ்சாலை துறை, ரயில்வே அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், மண்டல அலுவலகத்தில், நேற்று மாலை நடந்தது.இதில், மண் சரிவால், சுரங்கப்பாதையை, 9 அடியாக குறைப்பது குறித்து, ரயில்வே அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இதற்கு, அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக், எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசியதாவது:பேருந்து, ஆம்புலன்ஸ் செல்லும் வகையில், சுரங்கப்பாதை, 13.5 அடி உயரத்திற்கு இருக்க வேண்டும். மண் சரிவு என காரணம் கூறி, 9 அடியாக குறைத்தால், திருவொற்றியூர் மேற்கு பகுதிகள் வளர்ச்சியடையாது.கூவம் நதியின் கீழ், மெட்ரோ ரயில் ஓடும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. ஆனால், சுரங்கப்பாதை கட்டமைக்க, ரயில்வே துறையிடம் போதிய தொழில்நுட்பம் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. சுரங்கப்பாதை உயரம் குறைக்கப்பட்டால், அ.தி.மு.க., சார்பில் மாபெரும் போராட்டம் நடக்கும். மண்டல குழு தலைவர் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கள ஆய்வு செய்து, இதுகுறித்து முடிவு எடுப்பதற்காக, ரயில்வே தரப்பில், மூன்று வார அவகாசம் கோரப்பட்டுள்ளது.மக்கள் சிரமப்படுவர்!மத்திய - மாநில அரசுகள் இணைந்து அமைக்கும் சுரங்கப்பாதையின் உயரத்தை, மண் சரிவால் குறைப்பதாக, ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பேருந்து, ஆம்புலன்ஸ் செல்ல குறைந்தது, 10.5 அடி உயரம் தேவை. அதைவிட தாழ்வாக சுரங்க பாதை அமைத்தால், மக்கள் சிரமப்படுவர். இதில், நிதி பிரச்னை இருந்தால், வடசென்னை எம்.பி., கலாநிதியுடன் ஆலோசித்து, மாநில அளவில் நிதியை பெற்று தர முயற்சிக்கலாம். எனேவே, உயரத்தை குறைக்க கூடாது. - தனியரசு,தி.மு.க., மண்டல குழு தலைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை