உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒரத்தி -- தாம்பரம் புது வழித்தட பேருந்து முதல் நாளிலேயே டயர் வெடித்து விபத்து

ஒரத்தி -- தாம்பரம் புது வழித்தட பேருந்து முதல் நாளிலேயே டயர் வெடித்து விபத்து

அச்சிறுப்பாக்கம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஒரத்தி ஊராட்சி. இப்பகுதியின் அருகே, அன்னங்கால், பொறங்கால், கூணங்கரணை, ரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகள், அரசு பேருந்து வசதியின்றி இருந்தன.பகுதிவாசிகளின் பலகட்ட கோரிக்கைகளுக்கு பின், திருக்கழுக்குன்றம் பகுதியில் அமைச்சர் அன்பரசன் தலைமையில், தாம்பரம் -- திருக்கழுக்குன்றம், ஒரத்தி -- தாம்பரம் வழித்தடத்தில் புது பேருந்துகளை நேற்று முன்தினம், அறிமுகம் செய்தார்.இதையடுத்து, ஒரத்தியில் இருந்து அன்னங்கால், பொறங்கால், ரெட்டிபாளையம், எலப்பாக்கம் வழியாக தாம்பரம் செல்லும் தடம் எண்: 77பி பேருந்தை அச்சிறுப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் தலைமையிலான தி.மு.க.,வினர், பேருந்தை அலங்கரித்து, மலர்கள் சூடி நேற்றுவரவேற்றனர்.பொறங்கால் பகுதியில் இருந்து ஒரத்தி மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் பயணியர் பேருந்தில் ஏறி பயணம் செய்தனர். ஒரத்தி அருகே சென்றபோது, திடீரென 'டமால்' என, பெரும் சத்தத்துடன் டயர் வெடித்தது.உடனே, ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பேருந்து நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது குறித்து பயணியர் கூறுகையில், சுந்தரா டிராவல்ஸ் பட பாணியில் காலாவதியான பேருந்திற்கு பெயின்ட் அடித்து, டயர்களில் கருப்பு வர்ணம் தீட்டி, புதிய பேருந்து என மக்களை ஏமாற்றியுள்ளனர். வழித்தடம் மட்டுமே புதிது, பேருந்து பழசு தான்,'' என, கிண்டலடித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !