உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணின் வயிற்றில் பேண்டேஜ் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பெண்ணின் வயிற்றில் பேண்டேஜ் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சென்னை, மகப்பேறு அறுவை சிகிச்சையின்போது, வயிற்றில் 'பேண்டேஜ்' வைத்து தைத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, தனியார் மருத்துவமனை, சிகிச்சை அளித்த டாக்டர்கள், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தனசேகர் என்பவரது மனைவி ப்ரீத்தி தாக்கல் செய்த மனு:கர்ப்பிணியான நான், திருவொற்றியூரில் உள்ள எஸ்.எஸ்.எஸ்., மருத்துவமனையில், தொடர் சிகிச்சை பெற்று வந்தேன். ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோது, 2022 ஜூலை 16ல் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.திருவொற்றியூர் எஸ்.எஸ்.எஸ்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது, தாய், குழந்தையை காப்பாற்ற வேண்டும் எனில், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

மனரீதியாக பாதிப்பு

அதன்படி, 2022 ஜூலை 18ல், எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, ஆண் குழந்தை எடுக்கப்பட்டது. பிறந்த குழந்தை ஏழு மாத சிசு என்பதால், 'ரெயின்போ' மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தை சேர்க்கப்பட்டது.சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதும், தையல் போட்ட இடத்தில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. பின், எஸ்.எஸ்.எஸ்., மருத்துவமனையில் உள்நோயாளியாக எட்டு நாட்கள் தங்கியிருந்து, சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன்.ஆனால், உணவு உண்ணவும், குழந்தைக்கு பாலுாட்டவும் முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டேன்.டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, வயிற்றில் 'பேண்டேஜ்' இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது, அறுவை சிகிச்சைக்குப் பின் அகற்றப்பட்டது.மருத்துவமனை, டாக்டர்கள் கவனக்குறைவால் தனக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். சிகிச்சைக்கு என, 10 லட்சம் ரூபாய் வரை செலவிட நேர்ந்தது.எனவே, கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இம்மனுவை விசாரித்த, சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:அறுவை சிகிச்சையின்போது, மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் கவனக்குறைவாக நடந்துள்ளனர் என்பது ஆவணங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அறுவை சிகிச்சையின் போது, புகார்தாரரின் வயிற்றுக்குள் பேண்டேஜ் விட்டுச் சென்றுள்ளனர். அலட்சியம், கவனக்குறைவால் ஏற்பட்ட சேவைக் குறைபாடால், புகார்தாரர் 2வது அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

கவனக்குறைவு

இதன் காரணமாக, மன மற்றும் உடல் ரீதியான வேதனையை அனுபவிக்க நேர்ந்து உள்ளது. எனவே, அறுவை சிகிச்சையின்போது, கவனக்குறைவாக இருந்த மருத்துவமனை, டாக்டர்கள், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை கட்டணம் 3.26 லட்சம் ரூபாயும், வழக்கு செலவிற்காக 10,000 ரூபாயும் சேர்த்து, மொத்தம் 13.36 லட்சம் ரூபாயை, இரண்டு மாதங்களில் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி