35 முயல்களை அகற்ற உத்தரவு பள்ளி திறக்க இன்று ஆலோசனை
திருவொற்றியூர், வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படும் திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வளர்க்கப்பட்டு வரும், 35 முயல்களையும் அகற்ற, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளை திறப்பது குறித்து, இன்று மாணவர், பெற்றோருடன், அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். திருவொற்றியூர் கிராமத் தெருவில், விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை, 1,970 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இந்த பள்ளியில், அக்., 25ல் வாயு கசிவு ஏற்பட்டதாக, 45 மாணவியர் மயங்கி விழுந்தனர். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.பள்ளி மீண்டும் நவ., 5ல் திறக்கப்பபட்டது. அன்றும், வாயு கசிவு ஏற்பட்டதாக, 10 மாணவியர் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், பள்ளிக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.இரண்டு முறை வாயு கசிவு ஏற்பட்டதாக பிரச்னை ஏற்பட்டதால், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், காற்றின் மாசு அளவை கண்காணித்தனர். நவ., 4 - 8ம் தேதி வரை கண்காணிப்பு தொடர்ந்தது. முதற்கட்ட ஆய்வில், வாயு கசிவு இல்லை என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. இரண்டாம் கட்ட ஆய்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.இந்நிலையில், பள்ளி திறப்பு தொடர்பாக, தண்டையார்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் தலைமையில், திருவொற்றியூரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், நேற்று மதியம் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.இதில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வாசுதேவன், கேசவமூர்த்தி, மண்டல குழு தலைவர் தனியரசு, தாசில்தார் சகாயராணி, மண்டல நல அலுவலர் லீனா, பள்ளி தாளாளர் லாரன்ஸ், முதல்வர் ரூத் வனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆலோசனைக்குப்பின், வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் அளித்த பேட்டி :பள்ளி நிர்வாகம் தரப்பில், வாயு கசிவு ஏற்படவில்லை எனவும், முதலில், 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோரை அழைத்து, இன்று ஆலோசனை நடத்த உள்ளோம். விரைவில் வகுப்புகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.பள்ளியில் வாயு கசிவு ஏதும் இல்லை என, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. முழு அறிக்கை விரைவில் வெளியாகும்.பள்ளி வளாகத்தில், 35 முயல்கள் வளர்க்கப்படுவதாகவும், அதன் எச்சங்கள் வழியாக, இந்த பாதிப்பு ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது. எனவே, முயல்களை அகற்ற உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையே, வாயு கசிவு விவகாரத்திற்கு, சதி வேலை காரணமா என்ற கோணத்தில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.