சென்னை: தீவுத்திடலில் நடைபெற உள்ள 50வது இந்தியா சுற்றுலா மற்றும் தொழில்துறை கண்காட்சியை நடத்துவதற்கான 'டெ ண்டர்' நடைமுறைகள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த 'பன் வேர்ல்டு அண்ட் ரிசார்ட்ஸ் இந்தியா' நிறுவனம் சார்பில், சிவநாராயணன் தாக்கல் செய்த மனு: கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் கண்காட்சி நடத்தப்படும். அந்த வகையில் 50வது இந்தியா சுற்றுலா மற்றும் தொழில் துறை கண்காட்சி நடக்க உள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பை, கடந்த செப்., 3ல் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்டது. தீவுத்திடலில் 70 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சி டெண்டரில், தங்கள் நிறுவனமும் விண்ணப்பித்தது. ஆனால் உரிய தகுதியை பெற்றிருந்தும், எவ்வித காரணத்தையும் தெரிவிக்காமல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தமிழக டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்ட விதிகளுக்கு மாறாக, சுற்றுலா வளர்ச்சி கழகம் செயல்பட்டு உள்ளது. இதே கண்காட்சியை, கடந்த ஆறு முறை தங்கள் நிறுவனம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது. ஏற்கனவே தெரிவு செய்த நிறுவனத்துக்கு ஏற்ப, டெண்டர் நிபந்தனைகளை மாற்றி உள் ளனர். இதற்கு உரிய விளக்கமும் அளிக்கப்படவில்லை. எனவே, தங்கள் நிறுவன டெண்டர் விண்ணப்பத்தை ஏற்று, வெளிப்படையான முறையில் டெண்டர் நடைமுறைகளை நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை, டெண்டர் நடைமுறைகளை தொடர, இடைக்கால தடை விதிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களின் விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.விஜய் ஆனந்த் ஆஜராகி, ''தகுதியற்ற நிறுவனத்துக்கு டெண்டரை வழங்கும் வகையில் நிபந்தனைகளை, சட்டத்துக்கு மாறாக மாற்றி உள்ளனர். அற்ப காரணங்களை கூறி, தங்கள் நிறுவன விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உள்ளது,'' என்றார். இதற்கு, தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, 'உரிய விதிமுறைகளை பின்பற்றியே, டெண்டர் நடைமுறைகள் நடத்தப்பட்டு உள்ளன' என்றார். இதையடுத்து நீதிபதி, டெண்டர் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.