வேளச்சேரியில் புது நீர்நிலைக்கு இடம் கண்டறிய கலெக்டருக்கு உத்தரவு
சென்னை, வேளச்சேரி பகுதியில் புதிய நீர்நிலைகளை உருவாக்குவதற்கு ஏற்ற, அரசுக்குச் சொந்தமான காலி நிலங்கள் உள்ளதா என்பதை அடையாளம் காணுமாறு, சென்னை கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளதாக, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், தமிழக அரசின் தலைமை செயலர் தெரிவித்துள்ளார்.கழிவுநீர் கலப்பதாலும், குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதாலும், வேளச்சேரி ஏரி மாசடைந்து வருவது பற்றியும், ஆக்கிரமிப்புகளால் ஏரியின் பரப்பு பெருமளவு குறைந்திருப்பது குறித்தும், நம் நாளிதழில் செய்தி வெளியானது.இது தொடர்பாக, வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கமும், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.இதை விசாரித்த தீர்ப்பாயம்,'வேளச்சேரியை வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்க, வேளச்சேரி ஏரி மட்டுமல்லாது, சுற்றியுள்ள ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, நாராயணபுரம், பள்ளிக்கரணை ஆகிய ஏரிகளையும், கிண்டி தேசிய பூங்காவில் உள்ள இரண்டு ஏரிகளையும் துார் வாரி ஆழப்படுத்த, நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிண்டி தேசிய பூங்காவில் புதிய நீர்நிலை அமைக்க முடியுமா என்பது குறித்தும், ஆராய வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் செயலர்களுடன், தலைமை செயலர் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்' என, தீர்ப்பாயம் உத்தரவிட்டது.அதன்படி, தீர்ப்பாயத்தில் தலைமை செயலர் தாக்கல் செய்த அறிக்கை:கிண்டி தேசிய பூங்காவில், இரண்டு ஏரிகள் உள்ளன. மேலும் ஒரு நீர்நிலையை உருவாக்கினால், அங்குள்ள வனவிலங்குகளுக்கு இடையூறாக இருக்கும் என, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை தெரிவித்தது.புதிய நீர்நிலையை உருவாக்க, வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு துறைகள், அரசு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டு, பயன்படுத்தப்படாத காலி நிலங்களை அடையாளம் கண்டு தெரிவிக்குமாறு, சென்னை கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.பருவ மழைக் காலத்திற்கு முன், வேளச்சேரி ஏரியில் உள்ள நீர் தாமரை மற்றும் களைகளை அகற்றி, 95 லட்சம் ரூபாயில் துார் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கின் விசாரணை தீர்ப்பாயத்தில், வரும் அக்., 14ம் தேதி நடக்க உள்ளது.