உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இந்திய கலாசாரத்தை உலகம் அறிய செய்ய நம் இலக்கியங்கள் மொழிபெயர்ப்பு அவசியம்

இந்திய கலாசாரத்தை உலகம் அறிய செய்ய நம் இலக்கியங்கள் மொழிபெயர்ப்பு அவசியம்

சென்னை:''இந்திய கலாசாரத்தை உலகம் அறிய, நம் இலக்கியங்களை மொழி பெயர்க்க வேண்டியது அவசியம்,'' என, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், புதுச்சேரி ஆரோவில் பவுண்டேஷனின் செயலருமான ஜெயந்தி ரவி பேசினார்.'கலைமகள்' இதழின், 93வது ஆண்டு விழா, எழுத்தாளர்களுக்கு, 'கலைமகள்' விருது வழங்கும் விழா, 'தாமிர வருணி கேள்வி - பதில் பாகம் - 1' நுால் வெளியீட்டு விழா போன்றவை, சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடந்தன.கலைமகள் விருதுகளை வழங்கி, ஜெயந்தி ரவி பேசியதாவது:தமிழ் இலக்கியம், வாழ்வியல் நெறிகளை மக்களுக்குச் சொல்ல, ஒரு இதழைத் தொடங்க வேண்டும் என, நாராயணசாமி அய்யர் விரும்பினார். அதன் விளைவாக, பழமையான தமிழ் இலக்கிய சுவடிகளை தேடித்தேடி கண்டறிந்த உ.வே.சாமிநாத அய்யர் ஆசிரியராக பொறுப்பேற்க, கலைமகள் இதழ் வெளியானது. அதில் தான் பிச்சமூர்த்தி, அகிலன் உள்ளிட்டோர் எழுதினர். பாரதியின் முதல் கையெழுத்து கவிதையும் அதில் தான் வெளியானது. அப்படிப்பட்ட கலைமகள் இதழில் தான், மதிப்பு மிக்க இந்திய ஆன்மிகமும், கலைகளும் சொல்லும் சிறுகதைகள் வெளியாகின. அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால், பிற நாட்டினரும் உணர வசதியாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.கலைமகள் இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் பேசியதாவது:'தினமணி' நாளிதழின் ஆசிரியரும், என் தாத்தாவுமான ஏ.என்.சிவராமன் தான், என் எழுத்துக்கு பின்புலமாக இருந்தார். அவர் தான் எனக்கு இதழியலை கற்பித்தார். நான், கேள்வி - பதில் பகுதியை துவக்க ஆலோசித்த போது, அவர் பதிலுடன் உபரி தகவலையும் கூறும்படி அறிவுறுத்தினார். தமிழகத்தின் வற்றாத நதி தாமிர வருணி; அதைப்போல இதுவும் தொடர வேண்டும் என்றார். அதனால் தான், தாமிர வருணி கேள்வி - பதில் என்று தலைப்பிட்டேன். இதன் முதல் தொகுதி தற்போது வெளிவந்துள்ளது. இன்னும், 10 தொகுதிகள் வெளிவரும்.இவ்வாறு அவர் பேசினார்.எழுத்தாளர் ஆக்கியது கலைமகள்நான் மாணவனாக இருந்த போது, கலைமகள் குழுமத்தின் கண்ணன் இதழ் அறிமுகமானது. அதில், கதைகளைப் படித்த நான், அதற்கே என் கதைகள் அனுப்பினேன்; அவை பிரசுரமாகின. நான் எழுத்தாளரானேன். கல்லுாரியில், எழுதுவதில் ஆர்வம் உள்ள பாலகிருஷ்ணன் நண்பரானார். இருவரும் இரண்டு கதைகளை ஒரு பரிசுப் போட்டிக்கு அனுப்ப இருந்தோம். எங்களுக்குள் போட்டி வரக்கூடாது என்பதை உணர்ந்து, சுரேஷ், பாலகிருஷ்ணன் என்பதன் முதல் எழுத்துகளை வைத்து, 'சுபா' என்று மாற்றி அனுப்பினோம்; பரிசு கிடைத்தது. இப்போது வரை, நாங்கள் இரட்டை எழுத்தாளர்களாக தொடர்கிறோம்.- சுரேஷ், கலைமகள் விருது பெற்ற எழுத்தாளர்.பழமையும் புதுமையும்அறிஞர் பட்டாளமே ஆசிரியர் குழுவாய் இருந்த கலைமகள் இதழின் ஆசிரியராக உள்ள, கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், சர்க்கஸ் கயிற்றில் ஒற்றை சக்கர வண்டியை ஓட்டுவது போல பழமையையும், புதுமையையும் இணைத்து, மிக கவனமாக இதழை நடத்துகிறார். 'திருக்குறள் களஞ்சியம்' உள்ளிட்ட நுால்களை எழுதிய அவர், 'தாமிரவருணி கேள்வி - பதிலை'யும் எழுதி உள்ளார்; அவருக்கு பாராட்டுகள்.நான் பெற்ற இந்த விருதை, இதழியலாளர் மற்றும் எழுத்தாளராக வெற்றி பெற்ற பாரதி உள்ளிட்ட அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.- மாலன், பத்திரிகையாளர்.''நான் பிரமித்த கலைமகளில், நானும், 'தாய்பசு, போட்டி சித்திரம்' உள்ளிட்ட கதைகளை எழுதினேன். அதிலிருந்து விருது பெறுவது சந்தோஷம்,'' என்றார்.எழுத்தாளர் லஷ்மி ரமணன் பேசுகையில், ''கலைமகள் இதழில் எழுதுவதும், விருது பெறுவதும் பெருமை; அது கிடைத்துள்ளது. நன்றி,'' என்றார்.-பாலகிருஷ்ணன்,எழுத்தாளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை