உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.25 கோடியில் உருவான மேம்பால பூங்காக்கள் அலங்கோலம்: மீண்டும் வரி பணத்தை வீணடிக்குது மாநகராட்சி

ரூ.25 கோடியில் உருவான மேம்பால பூங்காக்கள் அலங்கோலம்: மீண்டும் வரி பணத்தை வீணடிக்குது மாநகராட்சி

'சிங்கார சென்னை - 2.0' திட்டத்தின்கீழ், 25 கோடி ரூபாயில் சென்னையில் அழகுபடுத்தப்பட்ட மேம்பாலங்கள், பராமரிப்பின்றி வீணான நிலையில், புதிதாக மேம்பாலங்களை அழகுபடுத்த, மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் கோடிக்கணக்கில் செலவிடுவது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சியில், 14 மேம்பாலங்கள் உட்பட மொத்தம் 234 பாலங்கள், சுரங்கப்பாதைகள் உள்ளன. இவற்றில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மேம்பாலங்களை அழகுபடுத்தும் பணியை மாநகராட்சி செய்து வருகிறது. அதன்படி, மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் செயற்கை நீரூற்று மற்றும் வண்ண விளக்குகள், கண்கவரும் ஓவியங்கள், பூ செடிகள் என, சுவர் பூங்கா அமைத்து அழகுபடுத்தும் பணி நடந்தது. இப்பணிகள், திருமங்கலம் மேம்பாலம், கோயம்பேடு மேம்பாலம், மதுரவாயல் புறவழிச்சாலை மேம்பாலம், தில்லை கங்கா நகர் மேம்பாலம், எழும்பூர் பாந்தியன் சாலை மேம்பாலம் உட்பட, 12 மேம்பாலங்கள் அழகுபடுத்தப்பட்டன. இதற்கு, மொத்தம் 25 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதேபோல், அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னலில், 6.50 லட்சம் ரூபாய் செலவில் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டது. அருவியை சுற்றி, மாறி மாறி ஒளிரும் வகையில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. இது, இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது. தற்போது பயன்பாடற்ற நிலையில் பாசி படர்ந்து காணப்படுகிறது. கவனம் இல்லை இதேபோல், மாநகராட்சி சார்பில் பல்வேறு மேம்பாலங்கள், சாலை சிக்னல்களை அழகுபடுத்துவதற்காக செயற்கை நீரூற்றுகள், சுவர் பூங்கா அமைக்கும் பணி நடந்தது. இவை, ஆரம்பத்தில் பார்க்க, 'பந்தா'வாகத் தான் இருந்தன. ஓரிரு மாதங்கள் மட்டுமே பராமரிக்கப்பட்டு, வண்ண விளக்குகள் ஒளிரூட்டப்பட்டன. நாளடைவில் செயற்கை நீரூற்றுகளும் செயல்பாடின்றி முடங்கின. பணத்தை செலவிடுவதில் அக்கறை காட்டிய மாநகராட்சி, அவற்றை முறையாக பராமரிக்க சிறிதும் கவனம் செலுத்தவில்லை. இதனால் விளக்குகள் பழுதானதுடன், செடிகளும் கருகி, அழகுடன் காணப்பட்ட மேம்பாலங்கள் தற்போது அலங்கோலமாக மாறிவிட்டன. மேம்பால பூங்காவிற்காக அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கட்டமைப்புகள் உடைந்து, ஆங்காங்கே குப்பை கழிவுகளாக கிடக்கின்றன. அதைக்கூட மாநகராட்சி கவனிக்கவில்லை. மீண்டும் பணி இந்நிலையில், ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை மேம்பாலத்தின் கீழ், 3.37 கோடி ரூபாய் மதிப்பில், நடைபயிற்சி பாதை, வண்ண விளக்குகள், பூச்செடிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே, புனரமைக்கப்பட்ட திருமங்கலம், எழும்பூர் மேம்பாலங்கள் பராமரிப்பின்றி மோசமான நிலையில் இருக்கும் சூழலில், இந்த மேம்பாலத்திற்கும் பணத்தை செலவிட்டு, மாநகராட்சி நிதியை வீணடிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் ஏற்கனவே அழகுபடுத்தப்பட்ட மேம்பாலங்கள், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. அதனால், பராமரிப்பு இல்லாமல் வீணானது. தற்போது அழகுபடுத்தப்படும் மேம்பாலங்களில், பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சிறுவர் விளையாட்டு திடல், நடைபயிற்சி பாதை அமைக்கப்படுவதால், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும்போது, பராமரிப்பு ஒழுங்காக நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்- நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Karuppasamy
நவ 04, 2025 16:29

25 கோடியில பூங்கா. தண்ணீர் ஊற்ற நாதி இல்ல இதுதான் சிங்கார சென்னை


Subramanian Kandasamy
நவ 04, 2025 11:56

விவசாயிகள் கடினமாக உழைத்து ஈட்டிய நெல்லை காப்பாற்ற ஷெட் கட்ட பணம் இல்லை. இது போன்று பணத்தை வீணடிக்கிறோம்


Subramanian Kandasamy
நவ 04, 2025 11:47

இது போன்ற வீண் செலவுகளில் பணத்தை செலவிட வேண்டாம். இதை ஆரம்பித்தவரிடம் பராமரிக்க சொல்லுங்கள். மரம் வைக்க எத்தனையோ தெருக்கள் உள்ளன. அதை செய்தால் நன்றாக இருக்கும்.


PADMANABHAN R
நவ 04, 2025 10:28

மக்கள் வரிப்பணத்தை திராவிட மாடல் அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதற்காகவே தீட்டப்படும் திட்டங்கள் இது போன்ற செயற்கை நீரூற்று மற்றும் நடைபாதை அமைப்பது போன்ற செயல்கள்.


Vasan
நவ 03, 2025 21:24

மேம்பாலத்தின் கீழே கக்கூஸ் கட்டினால் மக்களுக்கு பிரயோஜனமாக இருக்கும்.


N S
நவ 03, 2025 17:09

மாண்புமிகு முதல்வர் வழிகாட்டுதல்படி சென்னை மாநகர மேயரின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேலும் பணம் செலவழித்து மாநகர அதிகாரிகள் சென்னையை சிங்காரமாக்குவார்கள். இடையில் மழை, புயல் என இடையூறுகள் வந்தால் மக்கள் பொறுப்பல்ல.


jss
நவ 03, 2025 16:06

பின் எப்படி சம்பாதிப்பது?


Kulandai kannan
நவ 03, 2025 12:12

நம் ஜனங்களுக்கு எந்த நல்ல விஷயமும் சரிப்பட்டு வராது.


vbs manian
நவ 03, 2025 12:08

அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க கோடாவுன் இல்லை. இந்த வெட்டி செலவுக்கு நிறையவே உள்ளது.


சமீபத்திய செய்தி