பிரிவின் தவிப்பை உணர்த்திய பத்மினி
அன்பு, பாசம், அரவணைப்பு, வலி, ஏக்கம் உள்ளிட்டவற்றை பற்றி பேசும் 'அமரு ஷதகா' எனும் நுாலின் பாடல்களை மையமாக வைத்து, தங்கள் நாட்டியத்தை, கலைஞர்கள் நிகழ்த்தினர்.முதலாவதாக, தன் கச்சேரியை துவக்கினார் பத்மினி உபாத்யா. புதிதாக திருமணமான தம்பதியின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி, இதற்கான அடவுகளை அமைத்திருந்தார்.தம்பதி, மாலை மாற்றி, கரம்பிடித்து வலம் வரும் நிகழ்வோடு துவங்கியது. மணமகள், மணமகன் வீட்டுக்கு செல்கிறாள். அங்கிருக்கும் அனைத்தையும் ரசிக்கிறாள். ஜோடி கிளி கொஞ்சுவதையும், பூக்கள் பூத்துக்குலுங்குவதையும் கண்டு இன்பமடைகிறாள்.மனைவி, கிளியை கேட்கிறாள். கணவன், ஒரு கிளியை மட்டும் பிடித்து தருகிறான். அந்த கிளியை வீட்டில் கூண்டில் அடைத்து விட்டு அறைக்கு செல்கிறாள். தம்பதி காதலில் உறவாடுகின்றனர்.அடுத்த நாள் காலை, கிளிக்கு முத்தமிட செல்லும் மனைவியை கிளி கொத்தி காயப்படுத்துகிறது. இதை அபிநயத்தில் பத்மினி வெளிகாட்டிய விதம் அனைவரையும் கவர்ந்தது.கணவர், வேலைக்காக வெளியில் சென்றதை நினைத்து கிளியிடம் புலம்புகிறாள். அப்போதுதான் மனைவிக்கு புரிகிறது ஜோடியை பிரிந்த கிளியின் ஏக்கம். அதை சுதந்திரமாக விடுவிக்கிறாள். அப்போது கணவரும் வீடு திரும்புகிறான். ஜோடிகள் சேர்ந்து மகிழ்ச்சியுடன் இருப்பதுடன் இப்பகுதி முடிந்தது.அடுத்ததாக, ஷீஜித் - பார்வதி தம்பதியின், 'ஸ்பந்தனம்' எனும் தலைப்பில் நாட்டியம். தம்பதி இன்பமாய் நாட்களை கழிக்க, கணவருக்கு திடீரென வேலைக்கான உத்தரவு வருகிறது. அவனும், நம்பிக்கை கூறி, அவளிடம் விடைபெறுகிறான்.ஒவ்வொரு நாளும், கணவரின் ஏக்கத்தில் தன்னிலை மறந்து அவதிப்படுகிறாள். கணவன் திரும்பி வர, மனைவியின் நிலை கண்டு வருந்தி, அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறான். இருவரும் மகிழ்ச்சியாய் இருக்கும்போது மீண்டும், கணவனின் பயணத்திற்கான அழைப்பு வருகிறது.அப்போது, கணவனின் வாயை அடைத்து, தன்னை மனைவி தேற்றிக்கொள்கிறாள். இவ்வாறாக ஷீஜித் - பார்வதி நாட்டியம், காதல் பிரிவின் இதய துடிப்பை, நடனம்வழி காட்சிப்படுத்தினர்.இதேபோல் காதலை பிரிந்த தனிமை, சோகம் குறித்து சுனில் சுங்கரா, கதக் நடனத்திலும், அர்ச்சனா ராஜா - காசி ஐசோலா ஜோடி, குச்சிப்புடியிலும் வெளிகாட்டியது. 'அபிஜதா' சார்பில், கிருஷ்ண கான சபாவில், காதலின் பல பிம்பங்களை, கலைஞர்கள் வெளிப்படுத்தினர்.- மா.அன்புக்கரசி