முருகப்பெருமாள் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்
சென்னை, சென்னை மற்றும் புறநகரில் உள்ள முருகன் கோவில்களிலும், சிவாலயங்களில் பங்குனி உத்திர திருநாள் விழா, நேற்று விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.சென்னை, வடபழனி முருகன் கோவிலில் நேற்று அதிகாலை முதல் இரவு வரை திரளான பக்தர்கள், முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.பக்தர்களின் வசதிக்காக, கோவில் வளாகத்தினுள் ஆங்காங்கே குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.தெப்பத் திருவிழாபங்குனி உத்திர விழாவை தொடர்ந்து, இன்று முதல் 14ம் தேதி வரை மூன்று நாட்கள் இரவு 7:00 மணிக்கு தெப்பத் திருவிழா நடக்கிறது.இன்று இரவு தெப்பத்தில் வடபழனி முருகன் புறப்பாடு நடக்கிறது. இரண்டாம் நாள் சண்முகர், வள்ளி, தெய்வானை புறப்பாடும், மூன்றாம் நாள் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடக்கிறது.* குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவில் கொடி மரம் முன், 110 கிலோ சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய முருகனை, பக்தர்கள் தரிசித்து மொபைல் போன்களின் புகைப்படம் எடுத்து மகிழந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருந்தது.அதேபோல, சென்னை மற்றும் புறநகரில் உள்ள முருகப்பெருமான் கோவில்களில், பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடந்தது. இதில், தீர்த்தவாரி, சுவாமி திருக்கல்யாண வைபவங்கள் நடந்தன.
பூட்டை உடைத்த இன்ஸ்.,
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில் காவல் துறை சார்பில் பல்வேறு கெடுபிடிகள் உருவாக்கப்பட்டு, ஏராளமான செலவுகள் இழுத்துவிடப்பட்டன. இருப்பினும் பக்தர்களின் நலனை கருத்தில் வைத்து, அனைத்து ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டன.இந்நிலையில், வடபழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தனக்கு வேண்டப்பட்டர்களை உள்ளே விடுவதற்காக, கோவில் வி.வி.ஐ.பி., நுழைவாயில் சாவியை தன்னிடம் தரும்படி, கோவில் நிர்வாகத்திடம் கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்தார்.கோவில் நிர்வாகத்தினர் வி.ஐ.பி.,க்கள் வரும்போது கதவை திறந்து விடுவதாக கூறினர். ஆனால், தன்னிடம் தான் சாவி இருக்க வேண்டும் என அடம்பிடித்தார். ஒரு கட்டத்தில், நுழைவாயில் பூட்டை உடைத்து தனக்கு வேண்டப்பட்டவர்களை உள்ளே அனுப்பிக் கொண்டே இருந்தார்.இதைக்கண்டு கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பல மணிநேரம் வெயிலில் நின்று சுவாமியை தரிசிக்க வந்த பக்தர்கள் வேதனை அடைந்து, கோவில் நிர்வாகத்தை வசை பாடினர்.இன்ஸ்பெக்டர் பூட்டை உடைத்த சம்பவம் குறித்து, அறநிலையத்துறை மேலிடத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.