அகற்றிய வேகத்தடையை மீண்டும் அமைக்காததால் பீதி
வில்லிவாக்கம்: புதிய சாலைக்காக அகற்றப்பட்ட வேகத்தடையால், சிட்கோ நகரில் விபத்து அதிகரிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்ணா நகர் மண்டலம், 94வது வார்டு, வில்லிவாக்கம் சிட்கோ நகரில், ஒன்று முதல் 100 தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். சிட்கோ நகரை கடந்து, பாடி, வில்லிவாக்கம் காய்கறி சந்தை, ராஜமங்கலம் உள்ளிட்ட இடங்களுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். இங்குள்ள 15 மற்றும் 48வது தெருக்களின் இணைப்பு பகுதியான, 53வது தெருவில் வேகத்தடை இருந்தது. சில மாதங்களுக்கு முன், இப்பகுதியில் புதிய சாலை அமைக்கும் போது வேகத்தடை அகற்றப்பட்டது. அதன்பின், புதிய வேகத்தடை அமைக்கவில்லை. இதனால், நான்குமுனை சந்திப்பான இப்பகுதியில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். விபத்தில் சிக்கிவிடுவோமோ என பீதியடைகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.