உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆக்கிரமிப்பு மீட்ட இடத்தில் ரூ.1.11 கோடியில் பூங்கா 

ஆக்கிரமிப்பு மீட்ட இடத்தில் ரூ.1.11 கோடியில் பூங்கா 

சென்னை சாஸ்திரிபவன் ஆலுவலர்கள், 59 பேர் இணைந்து, வீட்டுவசதி மேம்பாட்டு கூட்டுறவு சங்கத்தை உருவாக்கினர். அச்சங்கம் சார்பில், 1979ம் ஆண்டு, ஆதம்பாக்கம், திருவள்ளுவர் நகரில், 5.4 ஏக்கர் நிலம் வாங்கினர். தற்போது, வேளச்சேரி - -பரங்கிமலை உள்வட்ட சாலையை ஒட்டி இந்த நிலம் அமைந்துள்ளது.அந்த இடத்தில் வீட்டு மனை திட்டத்திற்கு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் சங்கத்தினர், 1985ல் அனுமதி பெற்றனர். விதிமுறைப்படி, நிலம் மற்றும் சாலைப்பணிக்காக, 43,000 சதுர அடி நிலம், மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட ஓ.எஸ்.ஆர்., இடம் தங்களுக்கு சொந்தமானது எனவும், அதற்கு பட்டா உள்ளதாகவும் உரிமை கொண்டாடி, ஒரு கும்பல் அந்த இடத்தை கபளீகரம் செய்ய முயன்றது. இது, கூட்டுறவு நல சங்கத்தினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.'நிலத்தின் உண்மை தன்மை ஆய்வு செய்து, தனிநபருக்கான பட்டாவை தகுதி இழப்பு செய்ய வேண்டும். அந்த இடத்தில் பூங்கா அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூட்டுறவு நலச்சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.இதுகுறித்து, நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதன் நடவடிக்கையாக, அந்த இடம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தில், மாநகராட்சி சார்பில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது:திருவள்ளுவர் நகரில் மீட்கப்பட்ட பகுதியில், 11,000 சதுர அடி நிலத்தில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, 48 லட்சம் ரூபாயில் சமப்படுத்தி, சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்தகட்டமாக, 1.11 கோடி ரூபாயில், உடற்பயிற்சி, யோகா கூடம், சிறார் விளையாட்டு வளாகம், நடைபாதை, விளக்கு வசதி, இருக்கைகள், தோட்டம் என, அனைத்து வசதிகளுடன் கூடிய பூங்கா அமைக்கும் பணி துவங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.-- - நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
நவ 21, 2024 06:38

இதெல்லாம் என்ன எழவுடா ரூபாய் 1.11 கோடி என்று இல்லாமல் ரூபாய் 1.10 கோடி என்பது? எது கொள்ளையடிக்க இதுதான் சிறந்ததா?


சமீபத்திய செய்தி