மேடவாக்கம், தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையின் முக்கிய சந்திப்பு மேடவாக்கம். இங்கு, பள்ளிக்கரணை சரக காவல் நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பல்வேறு மொத்த, சில்லரை வணிக கடைகள், நிறுவனங்கள் உள்ளன.பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து ஆவடி, அம்பத்துார், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு, நேரடி பேருந்து வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் மேடவாக்கம் சந்திப்புக்கு வந்து, அங்கிருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு பேருந்துகளில் பயணிக்கின்றனர்.தவிர, மேடவாக்கம் சுற்றுப் பகுதிகளில் வசிப்போருக்கும் இப்பகுதியே பிரதான வணிக சந்தை என்பதால், இங்குள்ள நான்கு பேருந்து நிறுத்தங்களிலும், மக்கள் கூட்டம் எப்போதும் அதிகம் உள்ளது.எனவே, மேடவாக்கம் சந்திப்பை மையப் புள்ளியாக வைத்து, இங்கிருந்து பெரும்பாக்கம், வேளச்சேரி, சோழிங்கநல்லுார், தாம்பரம் மற்றும் மடிப்பாக்கம் ஆகிய நான்கு இடங்களுக்கும் சிற்றுந்து வசதியை அரசு ஏற்படுத்தி தந்தால், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.அதேபோல், அம்பத்துார், ஆவடிக்கும் பேருந்துகளை இயக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.