விமான முனையத்தில் மழைநீர் கொட்டுவதாக பயணியர் புகார்
சென்னை:சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, பெங்களூரு, கோல்கட்டா, மும்பை, டில்லி, ஹைதராபாத், குவஹாத்தி, புனே, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. இவற்றில் பயணிக்க, தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், விமான நிலையத்தில் முதலாவது முனைய புறப்பாடு பகுதியில், விமானத்திற்கு செல்ல பயணியர் காத்திருக்கும்போது, கூரையில் இருந்து மழைநீர் வடிந்து கீழே வருவதாக, பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த பதிவில், 'சென்னையில் மழை பெய்ய துவங்கிவிட்டது. சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு புறப்பாடு பகுதியில், பாதுகாப்பு சோதனை பகுதியில் நின்றிருந்தேன். எதிர்பாராதவிதமாக கூரையில் இருந்து மழைநீர் ஒழுகுகிறது. அவற்றை பிடிக்க பழைய பேக்கேஜ் ட்ரேக்கள் வைக்கப்பட்டுள்ளனு' என, நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார்.இதற்கு பதில் அளித்துள்ள சென்னை விமான நிலைய அதிகாரிகள், 'உங்களுக்கு ஏற்பட்ட நிகழ்வுக்கு வருந்துகிறோம். புகார் அளிக்கப்பட்ட இடத்திற்கு எங்கள் குழுவை அனுப்பி சரிசெய்து விட்டோம்' என தெரிவித்துள்ளனர்.சர்வதேச விமான நிலைய வளாகத்தில், மழை நேரத்தில் மழைநீர் ஒழுகுகிறதா என, பலரும் சமூக வளைதளங்கில் பதிவிட்டு வருகின்றனர். இந்த பிரச்னையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, விமான பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.