சிக்கலான இதய துடிப்பால் திணறிய நோயாளிக்கு எம்.ஜி.எம்.,மில் மறுவாழ்வு
சென்னை: சிக்கலான இதய துடிப்பு பிரச்னையால் பாதிக்கப்பட்ட, 60 வயது நோயாளிக்கு, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில், மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.எம்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 60 வயது நோயாளிக்கு, 'அட்ரியோவென்ட்ரிகுலர் பிளாக்' என்ற இதய பாதிப்பு காரணமாக, இதய துடிப்பு குறைந்தது. குறிப்பாக, அவரது இதய துடிப்பு 44 என்ற விகிதத்தில் இருந்தது. தொடர்ந்து, இதய துடிப்பு 28 ஆக குறைந்து மயக்கம், இதய செயலிழப்பு, திடீர் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உருவானது. இதுகுறித்து, மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர் பாபு ஏழுமலை கூறியதாவது: இதய துடிப்பை சீராக்க, தற்காலிக பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது. பின் கம்பிகள் இல்லாத 'இரட்டை அறை லீட்லெஸ் பேஸ்மேக்கர்' நோயாளிக்கு பொருத்தப்பட்டது. வழக்கமான முறையில், அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில், இச்சிகிச்சைக்கு பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள் தேவைப்படாது. தற்போது, அவர் நலமுடன் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.