உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பரிசோதனை, ஆலோசனைக்காக நோயாளிகள்... அலைக்கழிப்பு! ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தவம் கிடப்பது தொடருது

பரிசோதனை, ஆலோசனைக்காக நோயாளிகள்... அலைக்கழிப்பு! ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தவம் கிடப்பது தொடருது

அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், சென்னையில் உள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள், பல்வேறு பரிசோதனைகளுக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைப்பது தொடர்கிறது. இதனால், நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும், புறநோயாளிகள் சீட்டு வாங்கிக் கொண்டு, பல மணி நேரம் காத்திருக்கும் நிலைக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கீழ், எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவமனை, கண் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம் உள்ளிட்ட மருத்துவமனைகள் வருகின்றன. இந்த ஒவ்வொரு மருத்துவமனைகளுக்கும், தினமும் தலா 1,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர்.

அலைச்சல்

எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு, கர்ப்பிணியர் மட்டுமின்றி, கர்ப்பத்திற்கு முயற்சிப்பவர்கள், மகளிர் சார்ந்த பிரச்னைகளுக்கும் சிகிச்சை பெற, இங்கு வருகின்றனர். இந்த மருத்துவமனையிலேயே கூட்டம் அலைமோதுவதால், கர்ப்பிணியர் ஒவ்வொருவரும், நீண்ட வரிசையில், ஓரிரு மணி நேரம் காத்திருந்து தான் சிகிச்சை பெறுகின்றனர்.இந்நிலையில், 'சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ.,' ரத்த தட்டணுக்கள், தைராய்டு, டெங்கு, கொரோனா உள்ளிட்ட ரத்த பரிசோதனைகளுக்கு, நோயாளிகள் பெரும்பாலும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.இதில், ரத்த பரிசோதனைக்கு மட்டும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, நோயாளியின் உறவினரிடம் கொடுத்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். கர்ப்பிணியருக்கு இதயம், சர்க்கரை நோய், நரம்பியல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால், அவர்களையும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்குதான் அனுப்புகின்றனர்.அங்கும், 'ஓ.பி., சீட்டு பெற்று, ஒவ்வொரு துறை சார்ந்த டாக்டர்களை பார்க்க, நீண்ட வரிசையில் ஓரிரு மணி நேரம் காத்திருத்து, ஆலோசனை பெற வேண்டியுள்ளது.இதேபோல் தான், குழந்தைகள் நல மருத்துவமனை, கண் மருத்துவமனை, மனநல காப்பகம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் இருந்தும் ரத்த பரிசோதனை, எம்.ஆர்.ஐ., மற்றும் டாக்டர்கள் ஆலோசனை உள்ளிட்டவற்றிற்கு நோயாளிகள், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.மேலும், கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனை, தேசிய முதியோர் நல மருத்துவமனைகளில் இருந்தும், தமிழகத்தில் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்தும், மேம்பட்ட சிகிச்சைகளுக்கும், பல்துறை சிகிச்சைகளுக்கும், நோயாளிகள் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.இதனால், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பதுடன், ஒவ்வொரு துறையும் வெவ்வேறு இடங்களில் இருப்பதால், நடந்து அலைய வேண்டியிருப்பதாக நோயாளிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பரிசீலனை

இதுகுறித்து, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில், உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நோயாளியின் உறவினர் கூறியதாவது:என் மனைவிக்கு கர்ப்பப்பை தொடர்பான அறுவை சிகிச்சைக்காக சேர்த்துள்ளேன். நல்ல முறையில் சிகிச்சை அளிக்கின்றனர். ஆனால், ரத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளுக்கு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கின்றனர். அங்கு, நேரடியாக ஆய்வகத்தில் போய் கொடுக்க முடியாது.புறநோயாளிகள் பிரிவு அனுமதி சீட்டு பெற்று, ரத்தவியல் துறை டாக்டரிடம் காண்பித்து, ரத்த பரிசோதனை ஆய்வகங்களில் கொடுக்க வேண்டும். ஒரே இடத்தில் ரத்த மாதிரிகள் வாங்க மாட்டார்கள். இதேபோன்று நடைமுறையை ஒவ்வொரு பரிசோதனை ஆய்வகங்களில், பின்பற்ற அலைய வேண்டும். இந்த நடைமுறை முடிய, 2 மணி நேரம் வரை ஆகும். இவ்வாறு கொடுத்தாலும், நான்கு, ஐந்து நாட்களுக்கு பின், முடிவுகள் கிடைக்கும். எனவே அந்தந்த மருத்துவமனையிலேயே, அதற்கான டாக்டர்கள் வசதியை ஏற்படுத்தி,பரிசோதனை ஆய்வகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:மகப்பேறு மருத்துவமனையில், வாரந்தோறும் ஒவ்வொரு துறை சிறப்பு நிபுணர்கள் சென்று, மருத்துவ ஆலோசனை வழங்குகின்றனர். தீவிர சிகிச்சை தேவைப்படும் கர்ப்பிணியர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதில்லை. பரிந்துரைக்கப்படும் நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாயிலாக தான் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.பிற மருத்துவமனைகளில் இருந்து பரிந்துரைக்கப்பட்டாலும், ரத்த பரிசோதனை உள்ளிட்டவற்றிற்கு, ஓ.பி., சீட்டு வாங்கி செல்லும் நடைமுறை இருப்பது உண்மைதான்.இதனால் சில அசௌகரியங்கள் உள்ளதால், இந்த நடைமுறையை மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ