பாதசாரிகள் கடக்கும் நேரம் 20 விநாடிகளாக மாற்றம் - தினமலர் செய்தி எதிரொலி
சென்னை, வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலக சிக்னலில், பாதசாரிகள் கடப்பதற்கு வசதியாக, ஐந்தில் இருந்து 20 விநாடிகளாக மாற்றப்பட்டுள்ளது. வேப்பேரியில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் வசதிக்காக சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிக்னலை, பாதசாரிகள் சாலையை கடப்பதற்கென, ஐந்து விநாடிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த நொடிகளுக்குள், வாலிபர்களால்கூட சாலையை கடக்க முடியாது. அப்படியிருக்கும்போது முதியோர், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாலையை கடப்பதில் பெரிதும் சிக்கல் இருந்தது. விபத்து ஏற்படும் அபாயமும் நிலவியது. இது குறித்து நம் நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது. இதையடுத்து தற்போது, கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள சிக்னலை, பாதசாரிகள் கடக்கும் நேரத்தை ஐந்தில் இருந்து 20 விநாடிகளாக அதிகரித்து, போக்குவரத்து போலீசார் அறிவத்துள்ளனர்.