குரோம்பேட்டை,தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டலம், அஸ்தினாபுரம், நேதாஜி நகரில், சிறுவர் பூங்கா உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், நடைபாதை, மின் விளக்கு, நீரூற்று, பூச்செடி, யோகா மையம், எட்டு வடிவிலான கருங்கல் நடைபாதை, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளுடன், இப்பூங்கா திறக்கப்பட்டது.மூன்று ஆண்டுகள் சிறப்பாக பராமரித்தனர். நேதாஜி நகர் மற்றும் சுற்றியுள்ள முதியவர்கள், சிறுவர்கள் என, தினசரி ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.இந்தளவிற்கு மக்களுக்கு பயனுள்ளதாக இருந்த இப்பூங்கா, இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கிறது. விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து விட்டன. செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் தொல்லை அதிகரித்துள்ளது.மற்றொரு புறம், இரவில் கஞ்சா கும்பலின் புகலிடமாக மாறிவிட்டதாகவும், அடையாளம் தெரியாத நபர்கள், அங்குள்ள அறையில் இரவில் தங்குவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, சமூக விரோத செயல்களை தடுத்து, பூங்காவை சீரமைத்து மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.