சட்டவிரோத மது விற்பனை சைதையில் மக்கள் மறியல்
சைதாப்பேட்டை, நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு, நேற்று முன்தினம் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், பல இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்தது.இதில், சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலை, பழைய ஜெயராஜ் திரையரங்கம் அருகே, கடை எண்: 645 டாஸ்மாக் பாரில், நேற்று முன்தினம் காலை முதல் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்தது.இதுகுறித்து அப்பகுதிவாசிகள் குமரன் நகர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதையடுத்து, அ.தி.மு.க., சைதாப்பேட்டை மேற்கு பகுதி செயலர் சுகுமார் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமரன் நகர் போலீசார், அவர்களிடம் சமரசம் பேசி கலைந்து போக செய்தனர். மேலும், மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர்.
மேலும் 6 பேர் கைது
ஓட்டேரி, சேமாத்தம்மன் காலனியில், சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்ற பிரசாந்த், 27, கொரட்டூரைச் சேர்ந்த விநாயகமூர்த்தி, 49, ஆகியோரை ஓட்டேரி போலீசார் கைது செய்தனர்.அதேபோல், ஓட்டேரி காவல் நிலையம் அருகிலேயே நியூ டாங்க் சாலையில் மது விற்ற அயனாவரத்தை சேர்ந்த பிரசாந்த், 26, மற்றும் கொளத்துாரை சேர்ந்த விநாயகமூர்த்தி, 49, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அதேபோல், குமரன் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்ற, காரைக்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி, 41, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், 25, ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஆறு பேரிடமும், 60 மது பாட்டில்கள், 1,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.