ஆறு மணி நேர மின் வெட்டு துாக்கம் தொலைத்த மக்கள் இரவு துாக்கம் தொலைத்த மக்கள்
ஆவடி: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூன்று ஊராட்சிகளில், இரவு ஆறு மணி நேரம் ஏற்பட்ட மின்வெட்டால் பகுதிமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சோராஞ்சேரி, திருமணம் மற்றும் வயலாநல்லுார் ஊராட்சிகள். மூன்று ஊராட்சிகளையும் சேர்த்து, 20,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த மூன்று ஊராட்சிக்கும், பூந்தமல்லி ஊராட்சி அடுத்த பாரிவாக்கம் மின்வாரியத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப் படுகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இரவு 9:30 மணி அளவில், குறைந்த மின் அழுத்த பிரச்னையால் வீடுகள் இருளில் மூழ்கின. மேலும், உஷ்ணம் மற்றும் கொசு தொல்லையால் நள்ளிரவில் துாங்க முடியாமல் அவதி அடைந்தனர். இது குறித்து புகார் தெரிவிக்க, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பல முறை தொடர்பு கொள்ள முயன்றும் முடியாததால் அதிருப்தி அடைந்தனர். ஒரு வழியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, திருமணம், வயலாநல்லுார் பகுதியில், உயர் அழுத்த மின் வடம் அறுந்து விழுந்ததாகவும், அதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 4:00 மணி அளவில் மின் வினியோகம் சீரானது. குற்றச்சாட்டு இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மின்வெட்டு குறித்து முறையாக தகவல் தெரிவிப்பதில்லை; இது தொடர்கதையாக உள்ளது. வேலை முடிந்து இரவு தாமதமாக வீட்டுக்கு வருவோர், பள்ளி மாணவர்கள், முதியோர் என அனைவரும், திடீர் மின்வெட்டால் பாதிக்கப்படுகின்றனர். புகார் எண்ணில் வரும் அழைப்பை எடுக்காமல், அலட்சியமாக செயல்படும் ஊழியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.