திருவொற்றியூர்: 'ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு நிகழ்ச்சியின்போது, அபிஷேகத்திற்கு வெளியில் இருந்து கொண்டு வரப்படும் சாம்பிராணி தைலம் பயன்படுத்தப்பட மாட்டாது' என, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இங்கு, புற்று லிங்க திருமேனியான மூலவர் ஆதிபுரீஸ்வரருக்கு, ஆண்டு முழுதும் தங்க முலாம் பூசப்பட்ட, நாக கவசம் அணிவிக்கப்பட்டிருக்கும்.ஆண்டுக்கொரு முறை, கார்த்திகை தீபத்தையொட்டி, மூன்று நாட்கள் ஆதிபுரீஸ்வரர் திருமேனியில் அணிவிக்கப்பட்டிருக்கும் நாக கவசம் திறக்கப்பட்டு, புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடப்பது வழக்கம். இவ்வாண்டு, டிச., 4, 5, 6 ஆகிய தேதிகளில், ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில், தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், அபிஷேகத்திற்காக சாம்பிராணி தைலம் வாங்கி கொடுத்து வேண்டிக்கொள்வது வழக்கம். இந்த நிலையில், வெளியில் இருந்து சாம்பிராணி தைலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: புற்று லிங்க திருமேனியான ஆதிபுரீஸ்வரருக்கு, கோவில் நிர்வாகம் தரப்பில் விற்பனையாகும் சாம்பிராணி தைலம் கொண்டு மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். வெளியில் இருந்து கொண்டு வரப்படும் சாம்பிராணி தைலம் பயன்படுத்தப்பட மாட்டது. காரணம், மிக பழமையான புற்று வடிவிலான லிங்க திருமேனி என்பதால், ரசாயனம் கலந்த சாம்பிராணி தைலம் கொண்டு அபிஷேகம் செய்யும் பட்சத்தில், பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, கோவில் நிர்வாகம் தரப்பில், தரமான சாம்பிராணி தைலம், தேரடி, சன்னதி தெரு, அகத்தீஸ்வரர் கோவில் முன் இரு பிரிவாகவும், 16 கால் மண்டபம் அருகேயும், 200 கிராம், 500 கிராம், ஒரு கிலோ என்ற அளவில் விற்பனை செய்யப்படும். இவ்வாறு, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.