புகார்தாரரை அவமதித்த இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை உறுதி
சென்னை, புகார் அளிக்க சென்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரை அவமானப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய நொளம்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு எதிராக, இரு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில், காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் வானமலை. இவருக்கு சொந்தமாக, சென்னை நொளம்பூரில் உள்ள 'வினோத் விருக் ஷா' என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளது.இந்த அடுக்குமாடி குடியிருப்பு நலச்சங்க நிதி 1.25 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாக, வானமலை மற்றும் மற்றொரு வீட்டின் உரிமையாளரும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அவர்கள் விசாரித்து வருகின்றனர்.இந்த நிலையில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த தன்னை அவமானப்படுத்தும் வகையில், குடியிருப்பாளர்களின் 'வாட்ஸாப்' குழுவில், ஜாதி ரீதியான கருத்துகளை பதிவு செய்து வருவதாக கூறி, கடந்தாண்டு நவ., 4ல் நொளம்பூர் போலீசிலும், டிச., 9ல் தேசிய பட்டியலின ஆணையத்திலும், வானமலை புகார் அளித்திருந்தார்.புகாரை பெற்ற ஆணையம், 15 நாட்களுக்குள் மாநகர கமிஷனர் இப்புகாரை விசாரித்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.இந்த புகாரின் மீது, இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட நொளம்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில், வானமலை வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.சரவணகுமார் ஆஜரானார்.தொடர்ந்து, காவல் துறை தரப்பில், 'மனுதாரர் குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது' எனக்கூறி, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அப்போது, 'மனுதாரரின் கோரிக்கையின் அடிப்படையில், புலன் விசாரணை அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது' என, காவல்துறை தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி பி.வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து நீதிபதி, ''இன்ஸ்பெக்டர் முன் அமர, புகார்தாரருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வெள்ளை சட்டையுடன் வந்தால் சிவப்பு கம்பள வரவேற்பு தருவீர்களா; அழுக்கு சட்டையுடன் வந்தால் புகாரை ஏற்க மாட்டீர்களா; அவர்கள் ஓட்டளித்தால், அதை எண்ண மாட்டீர்களா?''மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று கொண்டு, நீங்கள் சொல்பவர் தான் இருக்கையில் அமர வேண்டும். மற்றவர்கள் அமரக்கூடாது என கூற நீங்கள் யார்; அரசு அலுவலகம் அனைத்தும் மக்களுக்கானது,'' என்றார்.பின் காவல் துறை தரப்பில், 'சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது இரண்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.