போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு தடுப்பதில் ஆவடியில் போலீசார் திணறல்
ஆவடி,ஆவடி போலீஸ் கமிஷனரகத்தின் கீழ் பட்டாபிராம், ஆவடி, அம்பத்துார், பூந்தமல்லி, போரூர் எஸ்.ஆர்.எம்.சி., செங்குன்றம், மணலி, எண்ணுார் மற்றும் பொன்னேரி என, ஒன்பது போக்குவரத்து காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட 387 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு போக்குவரத்து காவல் நிலையமும், மூன்று காவல் நிலையங்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது.ஆவடியில் இடங்களில் போக்குவரத்து சிக்னல் நிறுவப்பட்டுள்ளது. மேலும், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, ஜி.என்.செட்டி சாலை, மணலி விரைவு சாலை உட்பட 36 இடங்கள், விபத்து நடக்கும் பகுதிகளாக எச்சரிக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட பகுதிகளில் காலை மாலை வேளைகளில் போலீசார் பணியில் ஈடுபடுவர்.ஆனால், போதுமான போக்குவரத்து போலீசார் இல்லாததால், விதிமீறல் மற்றும் விபத்துகள் அதிகரித்துள்ளன. கூடுதல் பணி சுமையால், போலீசார் பலர் மன உளைச்சலில் பணியாற்றி வருகின்றனர். எனவே, கூடுதலாக 40 போலீசாரை நியமிக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.சென்னை மாநகர போலீஸ் கமிஷனரகத்தில் இருந்து வழங்கப்பட்ட 'இ - சலான்' மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டுவோரை கண்காணிக்கும் 'ப்ரீத் அனலைசர்' கருவிகளை தான் பயன்படுத்தி வருகின்றனர். அதுவும், அடிக்கடி 'மக்கர்' செய்வதாக கூறப்படுகிறது.அசுர வளர்ச்சி அடைந்து வரும் ஆவடி மாநகராட்சியின் பட்டாபிராம் பகுதியில், மாநிலத்தின் மூன்றாவது 'டைடல் பார்க்' கட்டடமும் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இதில், 6,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிய உள்ளனர். இதனால், போக்குவரத்து பிரச்னையும் அதிகரிக்கும் சூழல் உள்ளது. ஆனால், போதுமான போலீசார் இல்லாததால், பணி சுமை ஏற்பட்டுள்ளது.- போக்குவரத்து போலீஸ்காரர்
இன்ஸ்., மட்டும்
புதிதாக உருவாக்கப்பட்ட பொன்னேரி போக்குவரத்து காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். வேறு போலீசார் எவரும் தற்போது வரை நியமிக்கப்படவில்லை.