ரூ. 3 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
நாகர்கோவில்: நாகர்கோவிலில் வழக்கில் இருந்து விடுவிக்க, 3 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடக்கு கோணம் பகுதியை சேர்ந்தவர் ராஜன், 47; வியாபாரி. இந்து தமிழர் கட்சி நிர்வாகியான இவர் மீது, நேசமணி நகர் போலீசில் அடிதடி வழக்கு உள்ளது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க, போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதற்காக முதல்கட்டமாக, 1.85 லட்சம் ரூபாயை இன்ஸ்பெக்டரிடம் ராஜன் கொடுத்துள்ளார். இதையடுத்து, மீதமுள்ள பணத்தை கேட்டு, அன்பு பிரகாஷ் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் ராஜன் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தல்படி, ரசாயனம் தடவிய 1.15 லட்சம் ரூபாயை ஆரல்வாய்மொழியில் உள்ள அன்புவின் வீட்டில், நேற்று இரவு ராஜன் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரிக்கின்றனர்.