அரை நிர்வாணமாக அண்ணா சாலையில் ரகளை போலீசை தாக்கிய தனியார் நிறுவன ஊழியர் கைது
சென்னை,புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ஆனந்தராஜ், 36; அண்ணாசாலை போக்குவரத்து பிரிவு காவலர்.நேற்று காலை, 10:30 மணியளவில் அண்ணாசாலை பாரத் பெட்ரோல் பங்கு அருகே உள்ள வளைவில், போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, அரசு பேருந்துக்கு வழிவிடாமல் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டியை, பஸ் ஓட்டுனர் வழிவிடும்படி கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதை பார்த்த காவலர் ஆனந்தராஜ், இருசக்கர வாகன ஓட்டியை வழிவிடும்படி கூறினார்.இதில், ஆத்திரமடைந்த இருசக்கர வாகன ஓட்டி, காவலரின் சட்டையை பிடித்து இழுத்து அடித்துவிட்டு, உடையை கழற்றிப்போட்டு, அரை நிர்வாணமாக சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவம் அறிந்து வந்த போலீசார், சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டவரை, குண்டுக் கட்டாக துாக்கி அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். பின், போலீசாரை தாக்கிய நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.இதில், மயிலாப்பூர் மல்லீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகராஜ், 44 என்பதும், எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.அவரை போலீசார் கைது செய்தனர். காவல் நிலையத்தில் விசாரணையின்போது, அங்கு இருந்த காவலரையும் சண்முகராஜ் தாக்கினார். அவர், லேசான மன நலம் பாதிக்கபட்டவராக இருக்கலாம் என, கூறப்படுகிறது.