சென்னை ஒன் செயலியில் பஸ் டிக்கெட் பெறுவதில் சிக்கல்
சென்னை: 'கும்டா' எனப்படும் போக்கு வரத்து குழுமம் அறிமுகப்படுத்திய 'சென்னை ஒன்' செயலியில், மாநகர பேருந்து பயணச்சீட்டுக்கான கட்டணம் செலுத்த முடியவில்லை என, பயணி யர் புகார் தெரிவித்தனர். சென்னை பெருநகரில், மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயில், மாநகர பேருந்து ஆகியவற்றில் பயணிக்க, க்யூ.ஆர்., குறியீடு வாயிலாக டிக்கெட் பெற, 'சென்னை ஒன்' என்ற செயலி உருவாக்கப்பட்டது. செப்., 22ல், இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், தற்போது வரை, 10 லட்சத்துக்கும் மேல் டிக்கெட் பெறப்பட்டுள்ளது. மாநகர பேருந்தில் பயணிப்பவர்கள், இதை அதிகம் பயன்படுத்தி உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், மாநகர பேருந்துகளில் க்யூ.ஆர்., குறியீட்டை ஸ்கேன் செய்தால், புறப்படும் இடம் வந்துவிடுகிறது. சேரும் இடத்தை தேர்வு செய்தவுடன் டிக்கெட் வழங்கும் நடைமுறை துவங்குகிறது. இதில் கட்டணம் செலுத்தும் நிலையில், 'ஜிபே', 'போன்பே' உள்ளிட்ட, மொபைல் போனில் பணம் செலுத்தும் செயலிகளை பயன்படுத்தும் போது, அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் இணைப்பு முடங்கிவிடு கிறது. மீண்டும் முயற்சித்தாலும் இதே நிலை ஏற்படுகிறது. இதனால், 'சென்னை ஒன்' செயலியில், மாலை மற்றும் இரவு நேரங்களில், திடீரென சில வழித்தடங்களில் இது போன்ற பிரச்னை ஏற்படுவதாக பயணியரும், பேருந்து நடத்துநர்களும் புகார் தெரிவித்தனர். இது குறித்த முறையான புகார் எதுவும் வரவில்லை. இருப்பினும் விசாரித்து, பிரச்னை இருந்தால் உடனடியாக சரி செய்யப்படும் என, 'கும்டா' அதிகாரிகள் தெரிவித்தனர்.