உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேராசிரியர் உலகநாயகி பழனிக்கு இறைத்தமிழ் புதல்வி விருது

பேராசிரியர் உலகநாயகி பழனிக்கு இறைத்தமிழ் புதல்வி விருது

சென்னை,பாரதிய வித்யாபவன், உறவுச் சுரங்கம், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 63 வாரங்களாக, 'தமிழ் 63 நாயன்மார்கள்' என்ற தொடர் நிகழ்ச்சியை நடத்தியதை கவுரவிக்கும் வகையில், பேராசிரியர் உலகநாயகி பழனிக்கு, 'இறைத்தமிழ்ப்புதல்வி' என்ற விருதை, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் முரளி நேற்று வழங்கினார்.நிகழ்ச்சியில், சசிரேகா பாலசுப்பிரமணியனின் சேக்கிழார் இசை நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. சைவக்குரவர்கள் நால்வரின் பல்லக்கு உலாவுக்குப்பின், எழுத்தாளர் சிவசங்கரி, விருதாளரை வாழ்த்தினார்.

தொண்டின் பெருமை

நிகழ்ச்சியில், திருக்கயிலாய பரம்பரை, சந்தானம் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், 'தொண்டின் பெருமை' என்ற தலைப்பிலும், திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், 'பக்தி நெறி' என்ற தலைப்பிலும், கோவை காமாட்சிபுரி ஆதீனம், பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் 'தெய்வத்தமிழ்' என்ற தலைப்பிலும், சைலாபுரி ஆதீனம் தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், 'மனத்துாய்மை' என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசுகையில், ''தன் அடியார்களின் பெருமையை 'உலகெலாம்' என்ற அடியை தந்து, இறைவனே சேக்கிழாரை எழுத வைத்த இலக்கியம் பெரியபுராணம் மட்டும் தான்.''அதில், அடியார்களுக்கு ஒருவர் மண் திருவோடு தந்தார். இன்னொருவர் அடியார்களின் துணிகளை துவைத்தார். மற்றொருவர் பசியாற்றினார். இப்படி அவர்கள் செய்த செயல்கள் சிறிதானாலும், அவர்கள் மன உறுதியோடு செய்தனர். அதுதான் தொண்டின் பெருமை,'' என்றார்.திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசியதாவது:திருத்தாடகையீச்சரம் என்ற ஊர் தற்போது திருப்பனந்தாள் என அழைக்கப்படுகிறது. அங்கு, இறைவனுக்கு தினமும் மலர் மாலை அணிவிக்கும் தாடகை என்ற பக்தை, ஒருநாள் மாராப்பு விலகியதால், மாலை சூட்ட முடியாமல் தடுமாறினார்.

எது பக்தி?

அப்போது, இறைவனே குனிந்து மாலையை ஏற்றதால் சாய்ந்திருந்தார். அதை நிமிர்த்த ஒரு மன்னன் யானைகளை எல்லாம் பயன்படுத்தியும் முடியவில்லை. ஒரு சிவனடியார், தன் உயிரையும் பொருட்படுத்தாது, கழுத்தில் கயிறால் சுருக்கிட்டு, மறுமுனையால் நிமிர்த்த முயன்றதால், இறைவனே நிமிர்ந்தார். இதுதான் பக்தி.இவ்வாறு அவர் பேசினார்.பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் பேசுகையில், ''தெய்வ மொழியான தமிழை படித்தால் தன்னம்பிக்கை பெருகும். 'கற்க கசடற' என்ற குறளில் துணைக்கால் கிடையாது. அதாவது, கற்க வேண்டியதை சரியாக கற்றால், யார் துணையும் தேவைப்படாது,'' என்றார்.தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பேசுகையில், ''சென்னையில் தான், பூம்பாவையை நாவுக்கரசர் உயிர்ப்பித்தார். அவர் மனம் துாய்மையாக இருந்ததால் அது நடந்தது. நம் மனதையும் துாய்மையாக வைத்திருக்க வேண்டும்,'' என்றார்.நிகழ்ச்சியில், சசிரேகா பாலசுப்பிரமணியன், சேக்கிழார் என்ற நாட்டிய நாடகத்தை நிகழ்த்தினார். பாரதிய வித்யாபவன் இயக்குநர் ராமசாமி, கவிஞர் விஜய் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ