கான்கிரீட் சாலை அமைக்க அமைந்தகரையில் எதிர்ப்பு
அமைந்தகரை:அமைந்தகரை, மஞ்சக்கொல்லை தெருவில் கான்கிரீட் சாலை அமைக்க, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அண்ணா நகர் மண்டலம், 101வது வார்டில், அமைந்தகரை, புல்லா அவென்யூ அருகில், மஞ்சாக்கொல்லை தெரு, திருவீதி அம்மன் கோவில் தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இங்கு, 10 ஆண்டுகளுக்கு முன் கான்கிரீட் சாலை போடப்பட்டது. பல்வேறு காரணங்களுக்காக பள்ளம் தோண்டப்பட்டு, இச்சாலைகள் லாயக்கற்ற நிலையில் மாறின. நம் நாளிதழில் பலமுறை சுட்டிக்காட்டியபின், 16.70 லட்சம் ரூபாயில் புதிய சாலை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. இதில், திருவீதி அம்மன் கோவில் தெருக்கள் சிறிய அளவில் இருப்பதால், கான்கிரீட் சாலை அமைக்க அனுமதிக்கப்பட்டு, அதற்கான பணி நடந்து வருகிறது. அதேபோல், பெரிய தெருவான மஞ்சாக்கொல்லை தெருவில் தார் சாலை அமைக்கப்படும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்த நிலையில், கான்கிரீட் சாலை அமைக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பகுதிமக்கள், 'கான்கிரீட் சாலை அமைத்தால், நிலத்தடியில் நீர் செல்லாது. எனவே மஞ்சக்கொல்லை தெருவில் தார் சாலை அமைக்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.