உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒப்பந்த காலம் முடிந்ததால் பொது கழிப்பறைகள்...  இழுத்து மூடல்!சம்பளம் வராமல் பூங்கா தொழிலாளர்கள் தவிப்பு

ஒப்பந்த காலம் முடிந்ததால் பொது கழிப்பறைகள்...  இழுத்து மூடல்!சம்பளம் வராமல் பூங்கா தொழிலாளர்கள் தவிப்பு

மாதவரம்: சென்னையில் உள்ள பொது கழிப்பறைகளை பராமரிப்பதற்கான ஒப்பந்த காலம் முடிந்ததால், அவற்றை பராமரிக்க ஆட்களின்றி, பல கழிப்பறைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. அதுபோல, இரண்டு மாதங்களாக சம்பளம் கிடைக்காததால் பூங்கா தொழிலாளர்கள், காவலர்கள் திண்டாடி வருகின்றனர். மாநகராட்சி அலட்சியத்தால், பூங்காக்களையும் அடுத்தடுத்து இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், 908 பூங்காக்கள் உள்ளன. இதில், சாலையின் மைய தடுப்பு பூங்கா, போக்குவரத்து தீவு திட்டு ஆகியவை, சில நிறுவனங்கள் வாயிலாக பராமரிக்கப்படுகின்றன.Gallery அதேநேரம், 700க்கும் மேற்பட்ட பூங்காக்களை, இரண்டு தனியார் நிறுவனங்கள் பராமரித்து வருகின்றன. அவ்வாறு பராமரிக்கும் நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் பூங்கா பராமரிப்பாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குறிப்பாக, திரு.வி.க.நகர் மண்டலத்தில், 73, 76, 77 ஆகிய மண்டலங்களில், இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படாததால், பணியாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.தீ விபத்து அபாயம் அதே மண்டலத்தில், மாநகராட்சி மேயர் பிரியாவின், 74வது வார்டு பூங்கா பராமரிப்பாளர்களுக்கு மட்டும் எவ்வித பிரச்னையும் இன்றி ஊதியம் கிடைக்கிறது.மாதவரம் மண்டலத்தில் 40க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. இவற்றின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிக்கு, ஒப்பந்த நிறுவனம் மூலம் ஆட்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஒப்பந்த காலம் முடிந்ததால், தற்போது பூங்காக்களில் பாதுகாவலர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இதில், மாதவரம் பழைய மண்டல அலுவலகம் அருகே உள்ள, 26வது வார்டுக்குட்பட்ட சாமி நகரில் உள்ள மாநகராட்சி பூங்கா இழுத்து மூடப்பட்டுள்ளது. அதன் வாயிலிலேயே மரக்கிளைகள் மற்றும் குப்பை, மலை போல் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் தீ விபத்து அபாயமும் உள்ளது.மாதவரம் மண்டலம், 23 முதல் 33 வரை 11 வார்டுகள் உள்ளன. மாதவரம், புழல், கொசப்பூர், செங்குன்றம், கதிர்வேடு உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய இங்கு 60க்கும் மேற்பட்ட பொது கழிப்பறைகள் உள்ளன.கழிப்பறை பராமரிப்பு பணி, ஒப்பந்தம் வாயிலாக தனியாருக்கு விடப்பட்டிருந்தது. கழிப்பறைகளை பராமரிப்பதற்கான ஒப்பந்தம், கடந்த மாதம் முடிந்துவிட்டது. புதிய 'டெண்டர்' கோரப்பட்டு, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.ஆனால் எந்த டெண்டரும் கோராததால், பொது கழிப்பறைகளுக்கு தற்காலிகமாக பூட்டு போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து, பூங்கா காவலாளிகள் கூறியதாவது:பழைய ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, பூங்காக்களில் பணியில் அமர்த்தப்பட்டோம். அதன்படி, குடும்பத்துடன் பூங்காவில் தங்கி வருகிறோம். அந்த ஒப்பந்தம் முடிந்தப்பின் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டோம்.சிலர் சொந்த ஊர் திரும்பிய நிலையில், நாங்கள் பூங்காக்களில் தொடர்ந்து பணியாற்றும்படி, அதிகாரிகள் கேட்டு கொண்டனர். எங்கள் பிள்ளைகள் இங்கு படிப்பதால், நாங்களும் இங்கேயே உள்ளோம். ஆனால், அதிகாரிகள் அவ்வப்போது கொடுக்கும் உதவியை தவிர, ஊதியம் இல்லாமல் தவித்து வருகிறோம். இதற்கு, மாநகராட்சி அதிகாரிகள் உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.விரைவில் தீர்வு பூங்கா பராமரிப்பாளர்கள் கூறியதாவது:பூங்கா பராமரிப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம், முறையாக ஊதியம் வழங்குவதில்லை. ஒவ்வொரு மாத சம்பளமும், ஒன்றரை இரண்டரை மாத இடைவெளியில் தான் வழங்கப்படுகிறது.சம்பளம் முறையாக வழங்க, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்டால், ஆந்திரா, பீஹார் போன்ற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை பணியமர்த்துகின்றனர். இதனால், உள்ளூர் தொழிலாளர்களாகிய நாங்கள் பாதிக்கப் பட்டுள்ளோம்.சம்பந்தப்பட்ட நிறுவனம், ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காததுடன், சம்பளம் எவ்வளவு, பி.எப்., எவ்வளவு பிடித்தம் செய்கின்றனர் போன்ற விபரங்களை கூட தெரிவிக்க மறுக்கின்றனர்.மழை பெய்தாலும் நனைந்தபடி வேலை பார்க்க வேண்டும் என சித்ரவதை செய்கின்றனர். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தாலும், நீங்கள் தனியார் நிறுவன பணியாளர்கள், அந்நிறுவன அதிகாரிகளிடம் உங்கள் குறைகளை கூறுங்கள் என்கின்றனர்.இந்த விவகாரத்தில் முதல்வர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் உடனே தலையிட்டு, பூங்கா பராமரிப்பு தொழிலாளர்களுடைய பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த மாதமே டெண்டர் கோர வேண்டும் ஆனால், மற்ற பணிகள் அதிகம் இருந்ததால், பொது கழிப்பறைகளுக்கான பணிகளை கவனிக்கவில்லை. மேலும், ஏற்கனவே டெண்டர் எடுத்தவர்களே பராமரிப்பு பணிகளை தொடர்ந்தனர்.திடீரென அவர்கள் முற்றிலும் விலகியதால், பொது சுகாதாரம் கருதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.பூங்கா பராமரிப்பு மண்டல அளவில் மேற்கொள்ளப்படுகிறது. பூங்கா பராமரிப்பாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருந்தால், விரைவில் தீர்வு ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறி னார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N S
டிச 08, 2025 10:46

மழை நீர் சேதம் தடுக்க 4000 முதல் 8000 கோடி வரை நிலத்தடிக்கு" சென்று விட்டது. கழிப்பறையை கழுவ எங்கிருந்து பணம் வரும்? முதல்வர் வழிநடத்துதலில் அறநிலையத்துறையும், மேயர் அக்காவும் சென்று கொண்டிருக்கும் பொழுது, சிங்கார சென்னை நாற்றத்தை பொருத்துக்கொண்டுதான் இருக்கவேண்டும். தேர்தல் வருகின்றது. பாவம் ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் போன்று, விரைவில் இலவச உணவு எதிர்பார்க்கலாம்.


CHELLAKRISHNAN S
டிச 08, 2025 08:02

park in rajakilpakkam, selaiyur Tambaram has been closed for the last three years for re modelling, though it was in good condition. the irony is name was anjukam park n was ed by none other than Mr Stalin, the then dy cm in 2007


புதிய வீடியோ