உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சைதாப்பேட்டை, கே.கே., நகரில் ரூ.9 கோடியில் மழைநீர் வடிகால்

சைதாப்பேட்டை, கே.கே., நகரில் ரூ.9 கோடியில் மழைநீர் வடிகால்

கோடம்பாக்கம்: கோடம்பாக்கம் மண்டலம், 142வது வார்டு சைதாப்பேட்டையில், ஜீனிஸ் சாலை மற்றும் பஜார் சாலை உள்ளது. இவை, அண்ணா சாலை மற்றும் ஆலந்துார் பிரதான சாலைகளை இணைக்கின்றன.இச்சாலைகளில், அரசு மருத்துவமனை, காய்கறி சந்தை, மீன் சந்தை உள்ளிட்டவை அமைந்துள்ளன. மழைக்காலத்தில் இப்பகுதிகளில் மழைநீர் தேங்கி, பகுதிமக்கள் அவதிப்பட்டு வந்தனர். மழைக்காலத்தில் அண்ணா சாலையில் வடியும் தண்ணீர், பஜார் சாலையில் தேங்குகிறது. அதேபோல், பிள்ளையார் கோவில் தெரு, தர்மராஜா கோவில் தெரு, உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் மழைநீரும், இப்பகுதிகளில் தேங்குகிறது.இதற்கு காரணம், ஜீனிஸ் சாலையில் உள்ள மழைநீர் வடிகால் பாழடைந்த நிலையில் உள்ளது. மழைநீர் தேங்குவதை தடுக்க, ஜீனிஸ் சாலையில் 1.30 கி.மீ., துாரத்திற்கும், பஜார் சாலையில் 1.1 கி.மீ., துாரத்திற்கும் மழைநீர் வடிகால் அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இதையடுத்து, இரு சாலைகளிலும் 2.40 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைத்து, அண்ணா சாலை வழியாக அடையாற்றில் இணைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.அதேபோல், 138வது வார்டு கே.கே., நகரில் பாரதிதாசன் காலனியில் உள்ள மழைநீர் வடிகால் சேதமடைந்துள்ளதாலும், 100 அடி சாலை வடிகால், பாரதிதாசன் காலனி வடிகாலைவிட உயரமாக உள்ளதாலும் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்குகிறது.ஒவ்வொரு மழைக்காலத்திலும், 3 அடிக்கு மேல் மழைநீர் தேங்குவது வாடிக்கை. இதையடுத்து, 1.5 கி.மீ., துாரத்திற்கு 6.83 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.அத்துடன், பாரதிதாசன் காலனியில் மற்றொரு பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீரை எம்.ஜி.ஆர்., நகர் கால்வாயில் வெளியேற்றும் வகையில் வடிகால் அமைக்கப்பட உள்ளது.மேற்கண்ட இரு இடங்களிலும், வடிகால் பணி விரைவில் துவங்கவுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை