உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிகிச்சை அளித்த டாக்டரிடம் குரங்கு குட்டியை வழங்க மறுப்பு

சிகிச்சை அளித்த டாக்டரிடம் குரங்கு குட்டியை வழங்க மறுப்பு

சென்னை,தெரு நாய்களால் கடிபட்டு, சிகிச்சைக்கு பின் வண்டலுார் உயிரியல் பூங்காவில் உள்ள 200 கிராம் எடையுள்ள குரங்கு குட்டியை, சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவரிடம் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.கோவையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் வி.வல்லையப்பன் என்பவர் தாக்கல் செய்த மனு விபரம்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் கடந்த ஆண்டு டிச., 4ல் நாய்களுக்கு கருத்தடை முகாம் நடந்தது.அப்போது, நாய்களால் கடிபட்டு காயமடைந்த 200 கிராம் எடையுள்ள குரங்கு குட்டியை, வன காவலர் கொண்டு வந்தார். குரங்கு குட்டியின் இடுப்பு பகுதிக்கு கீழ் செயல் இழந்தது; ரேபிஸ் பாதிப்பும் இருந்தது.என் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, 10 மாதங்கள் சிகிச்சை அளித்ததில், குரங்கு குட்டி குணமானது. கடந்த மாதம் 26ல், குரங்கு குட்டியை வனத்துறையினர், என்னிடமிருந்து வாங்கி சென்று, வண்டலுார் உயிரியல் பூங்காவில் விட்டனர். குரங்கு குட்டிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, அது முழுமையாக குணமடையும் வரை, என் கட்டுப்பாட்டில் விட, வனத்துறைத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு பிளீடர் டி.சீனிவாசன் ஆஜராகி கூறியதாவது:கடந்தாண்டு டிச., 4 முதல் குரங்கு குட்டி, மனுதாரரிடம் இருந்தது. கடந்த மாதம் 26ல் காயங்களுடன் குரங்கு குட்டியை, வனத்துறை மீட்டது.உயிரியல் பூங்காவில் உள்ள குரங்கு குட்டிக்கு, உரிய சிகிச்சை மற்றும் சிறந்த உணவு அளிக்கப்பட்டு வருகிறது. உயிரியல் பூங்கா ஊழியர்கள், மருத்துவமனை ஊழியர்களிடம் சகஜமாக பழகி, சிகிச்சைக்கும் குரங்கு குட்டி ஒத்துழைத்து வருகிறது.வனத்துறைக்கு கிடைத்த தகவலின்பேரில், குரங்கு குட்டியை மீட்க சென்றபோது, மனுதாரர் குரங்கை ஒப்படைக்காமல் பல்வேறு இடங்களுக்கு எடுத்து சென்றுள்ளார்.மாநில கால்நடை மருத்துவ கவுன்சில் இணையதளத்தில், மனுதாரரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.சிறைபிடிக்கப்பட்டு வளர்க்கப்படும் ஒவ்வொரு வன விலங்குகளும், வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி, மாநில அரசின் சொத்தாகும். எனவே, மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என கூறி, அறிக்கையை தாக்கல் செய்தார்.இதை ஏற்ற நீதிபதி, வண்டலுார் உயிரியல் பூங்காவில் உள்ள குரங்கு குட்டியை, மனுதாரரிடம் ஒப்படைக்க முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ