மணலியில் ஆக்கிரமிப்பு அகற்றம் 20 ஆண்டுகள் பிரச்னைக்கு தீர்வு
மணலி, மணலி, பாடசாலை தெரு - காமராஜர் சாலை இணையும் பகுதியில், 20 ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பு கட்டடங்களால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனிடையே, பாடசாலை தெருவில், 1.2 கி.மீ., துாரத்திற்கு, 2.64 கோடி ரூபாய் செலவில், கான்கிரிட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.எனவே, ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. அதன்படி, ஆக., 22ம் தேதி, பாடசாலை தெருவில் உள்ள, ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணி துவங்கியது.அதற்குள், கட்டட உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தடையாணை பெற்றதால், அந்த பணி நிறுத்தப்பட்டது.நீதிமன்ற உத்தரவுபடி நேற்று காலை, மீண்டும் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் பணி துவங்கியது. அதன்படி மாநகராட்சி ஊழியர்கள், 'பொக்லைன்' இயந்திரங்களின் உதவியுடன், ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்தனர்.மணலி, பாடசாலை தெரு - காமராஜர் சாலை சந்திப்பில் இருந்த, 33 அடி துார ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டு உள்ளதாகவும், விரைவில் மற்ற ஆக்கிரமிப்புகளும் கணக்கெடுக்கப்பட்டு, முழுதுமாக அகற்றப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.20 ஆண்டுகளாக நெரிசலுக்கு காரணமாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டதால், மணலிவாசிகள் நிம்மதியடைந்துள்ளனர்.