சோழவரம் போலீஸ்காரரை தாக்கிய இருவருக்கு காப்பு
சோழவரம், ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். சோழவரம் காவல் நிலைய போலீஸ்காரர்கள் பிருத்விராஜ், 35, சீனிவாசன், 30, ஆகியோர், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சோழவரம் அடுத்த நாகத்தம்மன் நகரில், சந்தேகத்திற்கு இடமாக ஆட்டோவில் இருந்து இறங்கிய இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். காவல் நிலையம் அழைத்து செல்வதற்காக, அவர்களை பிடிக்க முயன்றபோது, போலீஸ்காரர் பிரித்விராஜை தாக்கி தப்ப முயன்றனர். பிரித்விராஜுக்கு மூக்கில் காயம் ஏற்பட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சக போலீசார், இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், சோழவரம் அடுத்த எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி, 34, சசிகுமார், 20, என்பது தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் சோழவரம் போலீசார் கைது செய்தனர். இதில், முனியசாமி மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.