வடிகால் பணியால் உடைந்த குழாய்கள் ஒரு வாரமாக சூளைமேடு பகுதியினர் அவதி
சூளைமேடு, வடிகால் பணியின் போது, குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் உடைந்ததில், அலட்சியம் காட்டும் இருதுறை பொறியாளர்களால், ஒருவாரமாக சூளைமேடு பகுதியினர் அவதிப்படுகின்றனர்.சூளைமேடு, திருவள்ளுவர் புரம், இரண்டாவது தெருவில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இத்தெருவில், கடந்த 15ம் தேதி மாநகராட்சியின் மழைநீர் வடிகால் பணிகள் துவங்கின. அப்போது, சாலையோரத்தில் பள்ளம் தோண்டும் போது, வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கும், நான்கு குழாய்கள் உடைந்தன. அதேபோல், மூன்று கழிவுநீர் குழாய்களும் சேதமடைந்தன. இதை முறையாக சீரமைக்காமல் அப்படியே விட்டுவிட்டதால், ஒருவாரமாக அப்பகுதியினர் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்த, அப்பகுதியினர் கூறியதாவது:மழைநீர் வடிகால் பணியின் போது, மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் குழாய்களை உடைத்தனர். இதை யார் சீரமைக்க வேண்டும் என தெரியவில்லை. இருதுறை உதவி பொறியாளர்களும் மாறி, மாறி கைகாட்டி, அலட்சிய போக்கு காட்டுகின்றனர். குழாய்கள் உடைந்து ஒருவாரமாக குடியிருப்புகள் முழுவதும், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. வீடுகளில் கழிவுநீர் அடைப்பு ஏற்படுகிறது. இருதுறை அதிகாரிகளால் கடும் அவதிப்படுகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.