மழைநீர் வடிகால்வாய் இணைப்பு புழுதிவாக்கம் பகுதியினர் நிம்மதி
புழுதிவாக்கம் பெருங்குடி மண்டலம், வார்டு 186க்கு உட்பட்டது புழுதிவாக்கம். இங்கு, மழைநீர் திட்டப்பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளன. இந்நிலையில், இங்குள்ள ஜெயா நகர் தெருவிற்கும், மந்தைவெளி தெருவிற்கும் இடையில் 15 அடி துாரத்திற்கு இணைப்பு கால்வாய் அமைக்க வேண்டியிருந்தது.இணைப்பு பணியை துவக்க மாநகராட்சி அதிகாரிகள் முயன்றபோது, 6 அடி அகலமுள்ள சிறிய சந்தின் முன் பகுதியை தனக்கு சொந்தமானது எனக்கூறி, தனிநபர் ஒருவர், பள்ளம் தோண்ட விடாமல் தடுத்து வந்தார். இதனால், திட்டப்பணி 10 மாதங்களாக தடைப்பட்டது.இதனால், இந்து காலனி, மகேஸ்வரி அவின்யூ, கணேஷ் நகர், ஜெயா நகர் பகுதிகளில் உள்ள வடிகால்வாயில் இருந்து மழைநீர் வெளியேற முடியாமல், அப்பகுதியினர் பாதிக்கப்படும் நிலை உள்ளது.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள், குடியிருப்பு நல சங்கத்தினர் மற்றும் அப்பகுதிவாசிகள், சம்பந்தப்பட்ட நபரிடம் நேரிடையாக சமரசம் பேசினர். அரசு ஆவணத்தின் உண்மை தன்மைகளை எடுத்துரைத்து, இணைப்பு கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாநகராட்சி அதிகாரிகளிடமும் தொடர்ந்து வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, நேற்று மாநகராட்சி அதிகாரிகள், மடிப்பாக்கம் போலீசார் மற்றும் பகுதிவாசிகளுடன் சம்பந்தப்பட்ட நபரிடம் சமரசம் பேசினர். அவர் சம்மதித்ததைத் தொடர்ந்து, இணைப்பு கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டும் பணி துவக்கப்பட்டது.